Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

யாருக்கும் வேறு எண்ணங்கள் வேண்டாம்; மீண்டும் ஆட்சி அமைக்கப் போவது நாம்தான்: அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஓபிஎஸ், இபிஎஸ் அறிவுரை

சென்னை

ஜெயலலிதா நினைவிட திறப்பு மற்றும் சசிகலா விடுதலை தொடர்பாக நேற்று காலை அதிமுக தலைமை அலுவலகத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அவைத்தலைவர் இ.மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழகநிர்வாகிகள் என பலரும் பங்கேற்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ.79.75 கோடியில் ஃபீனிக்ஸ் பறவைவடிவில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவுபெற்றுள்ள நிலையில், ஜெயலலிதா நினைவிடத்தை துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி வரும் 27-ம்தேதி திறந்துவைக்கிறார்.

முன்னதாக கடந்த ஜன.9-ம்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில், ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு நிர்வாகிகள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, நினைவிட திறப்பு விழா நிகழ்ச்சியை எவ்வாறு நடத்துவது, யார் யாரெல்லாம் பங்கேற்பது உள்ளிட்டவை குறித்து நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது, விழா தொடர்பாக மாவட்ட செயலாளர்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. எந்தெந்தமாவட்டங்களில் இருந்து தொண்டர்களை அழைத்துவருவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டன.

மேலும் ஜெயலலிதா நினைவிட திறப்புவிழா அன்று ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் கரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், அவர் 27-ம் தேதி வருவது கேள்விக்குறியாக உள்ளாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்றைய கூட்டத்தில் சசிகலாவின் வருகைமற்றும் அதன்பின் அதிமுகவின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தென்மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்ளாட்சி மன்ற தலைவர்கள் மற்றும் சிலர் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டுடன் இருப்பதாக கூட்டத்தில் தென் மாவட்டத்தை சேர்ந்த சில நிர்வாகிகள் தெரிவித்தபோது, அதற்கு பழனிசாமி, ஓபிஎஸ் இருவரும் ‘‘யாரும் கவலைப்பட வேண்டாம். அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நாம் தான் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைப்போம்.

எனவே, வெற்றி என்பதைத் தவிர யாருக்கும் வேறு எந்த எண்ணமும் வேண்டாம், யாரும் வேறு யார் பக்கமும் சாய்ந்துவிடாமல் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும். தேவையானவற்றை நாங்கள் செய்து தருகிறோம்’’ என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

காலை 10.15 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு முடிவுற்ற கூட்டத்துக்குப் பிறகு, அதிமுக தலைமை அலுவலகத்தில் பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் உள்ளிட்டோர் பொதுச்செயலாளர் அறையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து ஒருமணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து பழனிசாமி, ஓபிஎஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் ஜெயலலிதா நினைவிடம் வந்தனர்.அங்கு இறுதிக்கட்ட பணிகளை பார்வையிட்ட பிறகு முதல்வர் பழனிசாமி தன் இல்லம் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x