

சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 6 லட்சம் சுகாதாரப் பணியாளர்களுக்கு 160 மையங்களில் கோவிஷீல்டு, 6 மையங்களில் கோவேக்ஸின் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதுவரை 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சென்னை அரசு பொது மருத்துவமனையில் நேற்று கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டார். அப்போது, மருத்துவமனை டீன் தேரணிராஜன், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் ராமகிருஷ்ணன், சங்கத்தின் தொடர்பு அலுவலர் முத்துராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
ஒரு மருத்துவராக..
ஒரு அமைச்சராக அல்லாமல், மருத்துவராக கரோனா தொற்றுக்கான 'கோவேக்ஸின்' தடுப்பூசி போட்டுக் கொண்டேன். இந்தியாவில் கண்டுபிடித்து, உற்பத்தி செய்யப்பட்டது கோவேக்ஸின் தடுப்பூசி. தமிழகத்தில் இதுவரை 907 பேர் தான் கோவேக்ஸின் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். நான்908-வது நபர். குறைவான நபர்கள்இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்வதால்தான், அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக கோவேக்ஸின் தடுப்பூசியை போட்டுக் கொண்டேன். எந்த தயக்கமும் இல்லாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி செலுத்துவதால், பக்கவிளைவுகள் ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் வருகிறது. தடுப்பூசி சம்பந்தமாக யாரும், எந்த வதந்தியும் பரப்ப வேண்டாம். 166 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. தடுப்பு மருந்துகளுக்கான ஊசிகள் தேவையான அளவு உள்ளது.
பிறந்த குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் கரோனா தொற்று இதுவரை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதனால்தான், பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்து கேட்ட பின்பு, சுகாதாரத் துறை மற்றும்பள்ளிக்கல்வி துறை ஆலோசனைப்படி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
காமராஜ் உடல்நிலை
உணவுத் துறை அமைச்சர் காமராஜ் உடல் நிலையை கண்காணிக்க மருத்துவர்கள் தலைமையிலான தனி குழு செயல்பட்டு வருகிறது. தற்போது அவரதுஉடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலை படிப்படியாக தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துவருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
புதிதாக 574 பேருக்கு தொற்று
தமிழகத்தில் புதிதாக 574 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முதியவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 325, பெண்கள் 249 என மொத்தம் 574 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 155 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 33,585 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை சென்னையில் 2 லட்சத்து 23,986 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 16,205 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் சென்னையில் 203 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 689 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். சென்னையில் 1,790 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 5,073 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அரசு, தனியார் மருத்துவமனைகளில் நேற்று முதியவர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12,307 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 4,084 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 2 லட்சத்து 29,860, கோவையில் 53,918, செங்கல்பட்டில் 51,160, திருவள்ளூரில் 43,358 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு நிலவரம் உள்ளது. தமிழகத்தில் 253 அரசு, தனியார் ஆய்வகங்களில் இதுவரை 1 கோடியே 55 லட்சத்து 14,693 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. நேற்று மட்டும் 62,152 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.