Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

மக்கள் கிராம சபை கூட்டங்கள் இன்றுடன் நிறைவு; அடுத்தகட்ட பிரச்சாரத்துக்கு தயாராகுங்கள்: திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

திமுகவின் மக்கள் கிராம சபைகூட்டங்கள் இன்றுடன் நிறைவுபெறுவதையடுத்து, அடுத்தகட்ட பிரச்சாரம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 18-ம் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் பாலக்கோடு, முதல்வர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதிகளில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றேன். அதிமுக ஆட்சியின் மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. அதிமுக ஆட்சி இன்னும் 4 மாதங்களுக்கு மட்டுமே. அதன்பிறகு அமையும் திமுக ஆட்சி, தமிழகத்துக்கு விடியலை ஏற்படுத்தும் என்று மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினேன்.

கடந்த 19-ம் தேதி மின் துறை அமைச்சர் பி.தங்கமணியின் குமாரபாளையம், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் விராலிமலை, 20-ம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி நாயக்கனூர், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் திருமங்கலம் தொகுதிகளில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றேன். ஜனநாயக போர்க்களமான தேர்தல் களத்தில் ஓபிஎஸ்ஸை வீழ்த்த அவரது சொந்த தொகுதி மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள் என்பதை போடி தொகுதியில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டம் காட்டியது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையாவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சொன்னவர் அமைச்சர் உதயகுமார். ஆனால், அடிக்கல் நாட்டியதுடன் அப்படியே கிடக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை நிறைவேற்ற அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராஜினாமாவும் செய்யவில்லை.

16,500 மக்கள் கிராம, வார்டு சபைக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானித்த நிலையில், எதிர்பார்ப்புக்கும் அதிகமாக பல இடங்களில் மக்களின் ஆதரவுடன் எழுச்சிமிகு கூட்டங்கள் நடந்துள்ளன. ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற திமுகவின் தீர்மானத்துக்கு இதுவரை 1 கோடியே 5 லட்சம் பேர் கையெழுத்திட்டு ஒருமனதுடன் ஆதரவு அளித்துள்ளனர். மனதளவில் இதே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கும் தமிழக மக்களின் எண்ணிக்கை இதைவிடவும் அதிகம்.

ஆட்சி மாற்றத்துக்கு தமிழக மக்கள் தயாராகிவிட்டனர் என்பதையும், அவர்களின் ஒரே நன்னம்பிக்கை திமுகவும், அதன் கூட்டணியுமே என்பதையும் இந்த மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நிரூபித்துள்ளன. வரும் 23-ம் தேதி (இன்று) திருத்தணி, மதுரவாயல் தொகுதிகளில் நடக்கும் மக்கள் கிராம சபை கூட்டங்களில் பங்கேற்கிறேன். அத்துடன் மக்கள் கிராம, வார்டு சபை கூட்டங்கள் நிறைவு பெறுகின்றன.

விரைவில் அடுத்தகட்ட பிரச்சாரம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறேன். குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் அடுத்தகட்ட பிரச்சாரத்துக்கு திமுகவினர் ஆயத்தமாக வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x