

சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரச்சாரத்துக்காக, தமிழக முதல்வர் பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு கோவைக்கு வந்தார். உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கருப்பணன், சட்டப்பேரவைத்துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
அதைத் தொடர்ந்து, சிட்ரா அருகேயுள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தொழில்துறையினருடனான கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: எங்களால் முடிந்த அளவுக்கு, தொழில் துறையினரின் அனைத்துகோரிக்கையையும் இந்த அரசு நிறைவேற்றித் தரும். மனிதர்களுக்கு இரண்டு கண்கள் எப்படியோ, அதுபோல அரசாங்கத்துக்கு தொழிலும், வேளாண்மையும் இரண்டு கண்கள். ஒரு நாடு வளர வேண்டும் என்றால் தொழில் வளம், வேளாண்மை சிறக்க வேண்டும். மேற்கண்ட இரண்டிலும் நாங்கள் கவனம் செலுத்தி, வளமான தமிழகத்தை உருவாக்க அடித்தளம் அமைத்து, அதை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். நாட்டிலேயே அதிகளவு உணவு தானிய உற்பத்திசெய்து, தொடர்ந்து தேசிய விருதை எங்களது அரசு பெற்றுவருகிறது.
சென்னையில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி, 3 லட்சத்து 5 ஆயிரம் கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து, 304 தொழில் நிறுவனங்களை கொண்டு வந்தோம். கரோனா தொற்று காலத்தில் கூட, நாட்டிலேயே சுமார் ரூ.60 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்த்து, 74புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது இந்த அரசு. தற்போது நாட்டிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. அதற்கு சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதும் முக்கிய காரணம். தமிழகம் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது.
கோவை மாநகரில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாடுபட்டுவருகிறார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்ற அமைச்சர்களுக்கு முன்மாதிரியாக உள்ளார்.
போக்குவரத்து நெரிசலைத்தவிர்க்க பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேற்கு புறவழிச்சாலைத் திட்டத்துக்கு நிலம்கையெடுப்புப் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. புதிய குடிநீர் திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதிகமானவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் கோவை, திருப்பூர்மாவட்டங்களுக்கு தேவையான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.தொழில் துறையினரின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தரும். தொழில்துறையினர் எவ்வித இடையூறும் இன்றி தொழில்புரிய எனது அரசு துணை நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.