

சென்னை புறநகர் பகுதியில் இருக்கும் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் நடைமேம்பாலம், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
வெளிமாவட்டங்களில் வசிப்போர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வந்து செல்ல பெருங்களத்தூர் முக்கிய சந்திப்பாக இருக்கிறது. பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் அருகேஅமைந்திருப்பதால் மக்கள் வெளியூரில் இருந்து வந்து செல்லவசதியாக இருக்கிறது. பெரும்பாலான வெளியூர் பேருந்துகள் அனைத்தும் பெருங்களத்தூரில் நின்றே செல்கின்றன. தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், திரிசூலம் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள மக்கள், ஊருக்கு செல்ல வேண்டும் என்றால் கோயம்பேடு பேருந்து நிலையம் போவதைவிட பெருங்களத்தூர் சென்று பேருந்து பிடித்து விடலாம்.
பண்டிகை நாட்கள் மற்றும் வார விடுமுறை நாட்களில் பெருங்களத்தூரில் நீண்ட தொலைவுக்கு மக்கள் சாலையில் வரிசையாக நின்றியிருப்பார்கள். இதனால், போக்குவரத்து பாதிப்பு அதிகமாக காணப்படும். இதை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்துபோலீஸார் ஈடுபட்டாலும் வாகனங்களும் அதிகரித்து வருவதால் நெரிசல் குறைவதில்லை. தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் பெருங்களத்தூர்பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, ‘‘சென்னையில் கோயம்பேடு அடுத்து, பெருங்களத்தூரில்தான் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், இங்கு அடிப்படை வசதிகள் இல்லை. நிரந்தரமான கழிப்பிட வசதி இல்லை, பேருந்து நிலையத்தில் இருந்து ரயில் நிலையத்துக்கு செல்ல நடைமேடை மேம்பாலம் இல்லை. இதனால், மூத்த குடிமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் அவதிப்படுகின்றனர்’’ என்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் வெளியூர் சென்று, வர வசதியாக வண்டலூர் கிளாம்பக்கத்தில் பிரம்மாண்ட முறையில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இங்கு பேருந்துகள் வந்து செல்ல இட வசதி, பணிமனை, பயணிகள் தங்குமிடம், கழிப்பிட வசதி, கண்காணிப்பு கேமராக்கள், வாகன நிறுத்த வசதிஉள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும்போது, பெருங்களத்தூரில் பயணிகள் கூட்டம் குறைந்துவிடும். மேலும், கிளாம்பாக்கத்தில் இருந்துசென்னையின் அனைத்து பிரதான பகுதிகளுக்கும் மாநகர பேருந்துகள் இயக்க போதிய ஏற்பாடுகளும் செய்யப்படும்’’ என்றார்.