தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு; பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்: காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவு

ஞானசெல்வம்
ஞானசெல்வம்
Updated on
1 min read

தொழிலதிபரை மிரட்டி பணம்பறித்த குற்றச்சாட்டு தொடர்பாக, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தவர் ஞானசெல்வம் (55).இவர் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜசிம்மன் (46) என்பவரை கைது செய்து சிறைக்கு அனுப்பினார். தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி பழகி, ரூ.25 லட்சம்வரை மோசடி செய்து விட்டதாகவும், வீடியோ எடுத்து மிரட்டுவதாகவும் ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகார் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜசிம்மன் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

ராஜசிம்மன் சிறைக்கு அனுப்பப்பட்டபோது, அவரிடம் பறிமுதல் செய்தசெல்போன், 2 பவுன் நகைமற்றும் ஏடிஎம் கார்டு, விலை உயர்ந்த பொருட்கள் என சுமார் ரூ.28 லட்சம் வரை ஆய்வாளர் ஞானசெல்வம், புகார் அளித்த பெண் மற்றும் மேலும் ஒரு பெண் என 3 பேர் சேர்ந்து அபகரித்துக்கொண்டதாக புகார்எழுந்தது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து பெண் ஆய்வாளர் ஞானசெல்வம் மற்றும் மேலும் 2 பெண்கள் மீது மோசடி, கொலை மிரட்டல் உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண் ஆய்வாளர், புகார்தாரர் மற்றும் மேலும் ஒரு பெண் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்காக சென்னையில் ராஜசிம்மன் மீது வழக்குப் பதிவு செய்ததாகவும், கைது செய்யாமல் இருக்க ராஜசிம்மனிடம் பணம் பறித்துக் கொண்டு பின்னர், அவரை கைது செய்து சிறைக்கு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வாலின் கவனத்துக்கு போலீஸ் அதிகாரிகள் கொண்டு சென்றனர். இதையடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளான பெண் காவல் ஆய்வாளர் ஞானசெல்வத்தை பணியிடை நீக்கம்செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், ராஜசிம்மன் மற்றும் பெண் காவல் ஆய்வாளர் வழக்கு தொடர்பான முழு விபரமும் தனக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் என ஆயிரம் விளக்கு போலீஸாருக்கு காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in