Last Updated : 19 Oct, 2015 06:49 PM

 

Published : 19 Oct 2015 06:49 PM
Last Updated : 19 Oct 2015 06:49 PM

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்திய நிலவேம்பு: சித்த மருத்துவம் மீதான நம்பிக்கை அதிகரிப்பு

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் நிலவேம்பு கசாயம் பெரும் பங்காற்றியதால், மக்களிடம் சித்த மருத்துவம் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதையொட்டி, பள்ளிகளில் சித்த மருத்துவ முறைகள் மற்றும் சித்தர்கள் வரலாறு குறித்து பாடமாக வைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மூலிகைகள், செடி, கொடி, புல், இலை, வேர், பட்டை என எளிதில் கிடைக்கக் கூடியவற்றைக் கொண்டே சகல நோய்களையும் குணப்படுத்த முடியும் என்ற சூத்திரத்தை அறிமுகப்படுத்தியதில் சித்தர்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

எனினும், இன்றைய தலைமுறையினருக்கு சித்தர்களின் வரலாறு, சித்த மருத்துவத்தின் மகத்துவம் குறித்து அதிகம் தெரியவில்லை. எனவே இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் முயற்சியில், திருச்சி தொழிலாளர் நல ஈட்டுறுதி (இஎஸ்ஐ) மருத்துவமனையின் சித்த மருத்துவப் பிரிவு ஈடுபட்டுள்ளது. இதையொட்டி, 18 சித்தர்களின் நினைவைப் போற்றும் வகையில் மாதந்தோறும் 18-ம் தேதி இங்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல, நேற்று நந்திதேவர் சித்தர் நினைவாக நடைபெற்ற, 17-வது மருத்துவ முகாமில் திருச்சி, புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று, மருத்துவ ஆலோசனை, சிகிச்சை பெற்றனர்.

இதுகுறித்து இஎஸ்ஐ மருத்துவமனை சிறப்புநிலை சித்த மருத்துவர் எஸ்.காமராஜ் ‘தி இந்து’விடம் கூறியது: சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியாத நோய்களே இல்லை. உலகமே இதை ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், இந்த மருத்துவ முறையை தோற்றுவித்த முக்கியமான சித்தர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில், உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவியபோது, நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு அருந்தினால் நோய் குணமாகும் என்று அரசு அறிவித்து, விளம்பரம் செய்தது. இதையடுத்து, நிலவேம்பு கசாயம் அருந்திய ஆயிரக்கணக்கானோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்பினர். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு அரசே நிலவேம்பு கசாயத்தை வழங்கியது. இதற்குப் பிறகு சித்த மருத்துவம் குறித்த விழிப்புணர்வும், நம்பிக்கையும் தமிழக மக்களிடம் அதிகரித்து வருகிறது.

இதை இன்னும் அதிகரிப்பதற்காக 18 சித்தர்கள் பெயரில், மாதம் ஒரு சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்தோம். இதுவரை 17 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. படிப்படியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை சுமார் 9,000 பேர் முகாம்களில் பங்கேற்றுள்ளனர். தற்போது, சித்த மருத்துவத்துக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது.

சித்த மருத்துவர்கள் சார்பில் அரசிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். சித்தர்கள் வரலாறு, சித்த மருத்துவ முறைகள் குறித்து பள்ளிகளில் பாடத் திட்டம் கொண்டுவர வேண்டும். மூலிகைகளைப் பயன்படுத்தி காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட நோய்களை எளிதில் குணப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகளை அரசு சித்த மருத்துவர்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு கற்றுத்தர வேண்டும்.

மாநிலம் முழுவதும் சித்த மருத்துவ சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். ஆங்கில மருந்துகளுக்கு இணையாக சித்த மருந்து வகைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றினால், சித்த மருத்துவத்துக்கு தமிழகத்தில் சிறந்த எதிர்காலம் உண்டு என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x