மழை நின்று ஒரு வாரமாகியும் வடியாத தண்ணீர்: தூத்துக்குடியில் தொற்று நோய் பரவும் அபாயம்

தூத்துக்குடி சி.வா.அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலக வளாகத்தில் பாசி படர்ந்து குளம் போல தேங்கி நிற்கும் மழைநீர்.               படம்: என்.ராஜேஷ்
தூத்துக்குடி சி.வா.அரசு மேல்நிலைப்பள்ளி அலுவலக வளாகத்தில் பாசி படர்ந்து குளம் போல தேங்கி நிற்கும் மழைநீர். படம்: என்.ராஜேஷ்
Updated on
1 min read

தூத்துக்குடியில் மழை ஓய்ந்து ஒருவாரமாகியும் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாததால் மக்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.

கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக, தூத்துக்குடி மாநகரப் பகுதி முழுவதும் மழை வெள்ளம் தேங்கியது. குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மாநகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் இரவு பகலாக நடைபெற்ற போதிலும், மழை ஓய்ந்து ஒருவாரமாகியும் சில பகுதிகளில் இன்னும் மழைநீர் வடியவில்லை.

குறிப்பாக குறிஞ்சிநகர், பால்பாண்டிநகர், முத்தம்மாள் காலனி, ராம் நகர், ரஹமத் நகர், லெவிஞ்சிபுரம், பிரையண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில், வீடுகளைச் சுற்றி இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி நிற்பதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர்.

தூத்துக்குடி வி.இ. சாலையில் உள்ள சி.வா. அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் முழுவதும் இடுப்பளவுக்கு மழைநீர்தேங்கி நிற்கிறது. நீண்ட நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளதால் பாசி் படர்ந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியுள்ளது. இந்த பள்ளி வளாகத்தில்தான் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட அலுவலகம் ஆகியவை இயங்கி வருகின்றன.

இதனால், இங்கே வரும்ஊழியர்கள், ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளம் இடுப்பளவுக்கு தேங்கி நிற்பதால், பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்புகள் மாற்றுக்கட்டிடத்தில் நடைபெற்று வருகின்றன. மழைநீரை வெளியேற்ற மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள், மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in