

தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் நேற்று திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தை தங்கும் தளமாக கொண்டு சுமார் 250 விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. இவற்றில், தருவைகுளத்தைச் சேர்ந்த விசைப்படகுகளை தருவைகுளம் கடற்கரைக்கு மாற்ற அதன்உரிமையாளர்கள் முடிவு செய்தனர்.
ஆனால், இந்த படகுகளை தருவைகுளத்துக்கு மாற்றினால் பல்வேறு பிரச்சினைகள் எழும்எனக் கூறி மீன்பிடித் துறைமுகமீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மூன்று விசைப்படகுகளை அதன் உரிமையாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தருவைகுளம் கடற்கரைக்கு மாற்றியுள்ளனர்.
இதனைக் கண்டித்து தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக விசைப்படகு மீனவர்கள் நேற்று திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், 250 படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும், மீன்பிடித் துறைமுக விசைப்படகு மீனவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு மீன்வளத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
`தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடித் தொழிலுக்கு சென்ற படகுகளை தருவைகுளத்துக்கு மாற்ற அனுமதிக்கக்கூடாது. மேலும், அந்த படகுகள் இழுவலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவர்கள் வலியுறுத்தினர்.
அவர்களிடம், மீன்வளத்துறை இணை இயக்குநர் (பொ) தீபா பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மீனவர்கள் தங்கள் கோரிக்கை மனுவை அவரிடம் அளித்துவிட்டு கலைந்து சென்றனர்.