வேலூர் மாவட்டத்தில் புகழ் பெற்ற ஒடுக்கத்தூர் கொய்யா, இலவம்பாடி கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு: ஆரம்பக்கட்ட ஆய்வுகள் நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்ளிட்டோர். படம்:வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உள்ளிட்டோர். படம்:வி.எம்.மணிநாதன்.
Updated on
2 min read

வேலூர் மாவட்டத்தில் ஒடுக்கத்தூர் கொய்யா, இலவம்பாடி கத்திரிக் காய்க்கு புவிசார் குறியீடு பெறு வதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வில் வேளாண் வணிக அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த 10 மாதங் களுக்குப் பிறகு விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ குமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வேளாண் இணை இயக்குநர் மகேந்திர பிரதாப் தீக்ஷித், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற விவசாயிகள் எழுப்பிய கேள்விகள் அதற்கு ஆட்சியர், அதிகாரிகள் உள்ளிட்டோர் அளித்த பதில்கள் பின்வருமாறு:

விவசாயி: மேலரசம்பட்டில் கட்டப்பட்ட 8 அடி உயர தடுப் பணை சேதமடைந்துள்ளது. அதை சீர் செய்து கொடுக்க வேண்டும். ஒடுக்கத்தூர் கொய்யாவை ஏற்றுமதி செய்ய பயிற்சி அளிப்ப துடன் முள்கத்திரி மரம் விளைச்சல் குறித்து விவசாயிகளுக்கு விளக்க வேண்டும்.

ஆட்சியர்: ஒடுக்கத்தூர் கொய்யா, இலவம்பாடி கத்திரிக்காய் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வது தொடர்பாக விரைவில் கூட்டம் நடத்தப்படும். இதில், விவசாயிகளும் இணைக்கப் படுவார்கள்.

அதிகாரி: கோவையில் வேளாண் பல்கலையில் ஒட்டு முறையில் கத்திரி மரம் வளர்க்க ஆய்வுகள் நடந்தன. சுண்டைக்காய் செடியின் வேர் பகுதியுடன் கத்திரி செடியை ஒட்ட வைத்து வளர்க்க ஆய்வுகள் நடந்தன. இதில், முள் கத்திரி மட்டும் வளரவில்லை. பிற கத்திரி வகைகள் வளர்ந்தன. ஒடுக்கத்தூர் கொய்யா, இலம்பாடி கத்திரிக்காய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக ஆரம்பக்கட்ட ஆய்வுப் பணியில் வேளாண் வணிக அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் கொய்யா, கத்திரி விளைச்சல் பரப்பளவு, விளையும் மாதங்கள், அதற்கான சிறப்புகள், விவசாய குழுக்கள் உள்ளிட்ட அடிப்படை புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

விவசாயி: ஒரு விவசாயியின் காலை சுற்றிய மலைப் பாம்பை அடித்து கொன்றதற்காக வனத் துறையினர் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். காட்டுப் பன்றி குறுக்கே வந்ததால் விபத்தில் சிக்கி விவசாயி உயிரிழந்தார். இதில், காட்டுப்பன்றியும் இறந்ததால் அதன் உடலை தூக்கிச் சென்ற வர்கள் யார்? என வனத்துறை யினர் தேடுகின்றனர். வன விலங்குகளைப்போல் மனித உயிர் களுக்கும் வனத்துறையினர் மதிப்பளிக்க வேண்டும்.

ஆட்சியர்: காட்டுப்பன்றியால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த விவசாயிக்கு நிவாரணம் வழங்க மனு அளிக்கவும்.

விவசாயி: தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டம் எந்த நிலையில் உள்ளது.

ஆட்சியர்: இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த ரூ.624 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

விவசாயி: சமீபத்தில் பெய்த மழையால் பத்தலப்பல்லி அணை யில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாகச் சென்றது.

ஆட்சியர்: அணைக்கான டெண் டர் இறுதி கட்டத்தில் உள்ளது.

விவசாயி: செண்டத்தூர் ஏரிக்கான நீர்வரத்துக் கால்வாய் சீரமைக்க வனத்துறை அனுமதி அளிக்க வேண்டும். இதன்மூலம் வனப்பகுதியில் இருந்து வரும் தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.

ஆட்சியர்: செண்டத்தூர் ஏரியுடன் சிந்தனக்கனவாய் ஏரிக்கான நீர்வரத்துக் கால்வாய் தொடர்பாக வனத்துறையினர் வனக்குழு கூட்டத்தை கூட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in