

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் மீண்டும் பரிசல் இயக்கத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.
ஒகேனக்கல்லில் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி பரிசல் கவிழ்ந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் 6 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். எனவே, அன்று முதல் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
பரிசல் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கை வைத்தபோதும் மாவட்ட நிர்வாகம் பரிசல் இயக்கத்துக்கு அனுமதி வழங்கவில்லை. மாறாக, எதிர்காலத்தில் ஒகேனக்கல்லில் பரிசல் மூலம் விபத்தோ அல்லது உயிரிழப்போ நடக்காத வகையிலான ஏற்பாடுகளை செய்வது குறித்து தொடர் ஆய்வுகளை மாவட்ட நிர்வாகம் நடத்தி வந்தது.
பரிசல் ஓட்டுநர்கள் அவசர சூழலில் செயல்பட வேண்டிய விதம், விபத்தில் சிக்கியவர்களுக்கு அளிக்க வேண்டிய முதலுதவி ஆகியவை குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பரிசல்களின் தரம், பரிசல் ஓட்டுநர்களின் உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவை குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், ஆட்சியர், எஸ்.பி. உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் குழுவினர் கடந்த ஒரு வாரமாக ஒகேனக்கல்லில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதுதவிர, லைஃப் ஜாக்கெட் பயன்படுத்தி ஆபத்து தருணத்தில் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஒத்திகை பார்த்தனர்.
தற்போது 3 அடுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் 3 வித பரிசல் பயணங்களை செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் இறுதி முடிவெடுத்துள்ளது. இதுபற்றி ஆட்சியர் விவேகானந்தன் கூறியது:
பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு பரிசல் இயக்கம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சில முடிவுகளை எடுத்துள்ளது. அதன்படி 3 அடுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இறுதி செய்யப் பட்டுள்ளது. பரிசல் பயணம் செல்வோர் செல்போன், ஷு போன்றவற்றுடன் பரிசலில் செல்லக் கூடாது,
லைஃப் ஜாக்கெட் கட்டாயம் அணிய வேண்டும் என்பது முதல் அடுக்கு பாதுகாப்பு. 2 பயணிகள் பரிசலுக்கு ஒரு பரிசல் வீதம் நீச்சல் வீரர்கள் மற்றும் மீட்புப் பொருட்கள் அடங்கிய ஒரு பரிசல் உடன் பயணிப்பது 2-ம் அடுக்கு பாதுகாப்பு.
3-ம் அடுக்கு பாதுகாப்பு என்பது 15 கண்காணிப்பாளர்கள் ஒகேனக்கல்லின் பல்வேறு பகுதிகளில் பணியில் ஈடுபடுவர். ஆபத்து சூழல் ஏற்பட்டால் உடனடியாக இவர்கள் தண்ணீரில் குதித்து மீட்புப் பணியில் ஈடுபடுவர். இந்த 3 அடுக்கு பாதுகாப்பு அம்சங்களுடன் படகு இயக்கம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர பரிசல் பயணத்தை சிறிய சுற்று, நடுத்தர சுற்று, பெரிய சுற்று என 3 வகையாக பிரிக்கப் பட்டுள்ளது.
மாமரமத்துக் கடவு பகுதியில் மட்டும் சுற்றி வருவது சிறிய சுற்று. வனத்துறை கண்காணிப்பு கோபுரம் வரை சென்று வருவது நடுத்தர சுற்று. வழக்கம்போல் மணல் திட்டு வரை செல்வது பெரிய சுற்று. இதற்கு ஒரு பரிசலுக்கு முறையே ரூ.240, ரூ.340, ரூ.640 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பரிசலிலும் 4 நபர்கள் அல்லது 350 கிலோ எடைக்கு மிகாமல் மட்டுமே ஆட்களை ஏற்றும் நடைமுறை கட்டாயமாக பின்பற்றப்படும். இந்த அம்சங்களுடன், விபத்தில்லாமல் பரிசல் பயணத்தை செயல்படுத்திட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விரைவில் பரிசல் இயக்கம் தொடங்கும்.
இவ்வாறு ஆட்சியர் கூறினார்.
இந்நிலையில், அரசு அதிகாரிகள் சிலர், ‘நாளை (இன்று) அல்லது அதற்கு மறுநாள் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கம் உறுதியாக தொடங்கப்பட்டு விடும்’ என்றனர்.
ஒகேனக்கல்லில் ஆட்சியர் உட்பட அதிகாரிகள் குழுவினர் பரிசலில் சென்று ஆய்வு செய்தனர்
பாதுகாப்புக்கு சிறப்பு பரிசல்
2 பயணிகள் பரிசலை பின் தொடரும் பாதுகாப்பு பரிசல்கள் பெங்களூருவில் உள்ள கவுன்சில் ஃபார் சயின்டிபிக் இண்டஸ்ட்ரியல் ரிசர்ச் என்ற மையத்தில் இருந்து வாங்கப்பட உள்ளது. ஒகேனக்கல்லில் பயன்படுத்தப்படும் பரிசலை மாதிரியாகக் கொண்டு எளிதில் கவிழாத வகையில் சிறப்பு பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த பரிசல் தயாரிக்கப்பட உள்ளது. சிறிய அளவிலான இந்த பரிசலில் தான் நீச்சல் வீரர்கள், மீட்பு உபகரணங்களுடன் பரிசல்களை பின் தொடர உள்ளனர்.