

கோவையில் பிரச்சாரத்துக்கு வந்த முதல்வரை வரவேற்று, அதிமுக சார்பில் விளம்பரப் பதாகைகள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழக முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, கோவையில் இன்று (22-ம் தேதி) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இந்த மூன்று நாட்களில் மாநகர் மற்றும் புறநகரில் 25க்கும் மேற்பட்ட இடங்களைக் கடந்து, முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
கோவைக்கு வருகை தந்துள்ள முதல்வர் பழனிசாமியை வரவேற்கும் வகையில் அதிமுகவினர் சார்பில் பிரம்மாண்ட விளம்பரப் பதாகைகள், பூரண கும்ப வரவேற்பு, ஜமாப் மேளங்கள், ஆட்டம் போன்ற பலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, விமான நிலையத்தின் அருகில் இருந்து முதல்வர் பிரச்சாரத்துக்காகச் செல்லும் இடங்கள், வழித்தடங்கள் என மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் பல அடி உயரங்களில் பிரம்மாண்ட கட் அவுட்டுகள், விளம்பரப் பதாகைகள் அதிமுக சார்பில் வைக்கப்பட்டுள்ளன.
அதில் முதல்வர் பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவை உறுப்பினர்களின் புகைப்படங்கள் பதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக செல்வபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட வரவேற்புப் பதாகை பொதுமக்களிடம் கவனத்தைப் பெற்றுள்ளது.
மேலும், சில இடங்களில், பொதுமக்களுக்கு இடையூறாகவும், உரிய அனுமதியில்லாமலும், மேற்கண்ட விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன என பொதுமக்களால் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.
முந்தைய உயிரிழப்புகள்
சில ஆண்டுகளுக்கு முன்னர், அதிமுக சார்பில் நடத்தப்பட்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது, கோவை விமான நிலையம் அருகே வைக்கப்பட்டு இருந்த அலங்கார வளைவில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு அவிநாசி சாலை கோல்டுவின்ஸ் அருகே சாலையோரம் இருந்த விளம்பரக் கம்பம் விழுந்து, சாலையில் சென்ற இளம்பெண் விபத்தில் சிக்கிப் படுகாயமடைந்தார். சில மாதங்களுக்கு முன்னர், விளம்பரக் கம்பம் அமைக்கும்போது, ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
மேலும், தொடர் விபத்து சம்பவங்களைத் தொடர்ந்து, விளம்பரப் பதாகைகள் வைப்பதில் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களைக் கூறியுள்ளது. இதை மீறும் வகையில் அதிமுகவின் சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
நடவடிக்கை எடுக்க வேண்டும்
இது தொடர்பாக திமுக எம்எல்ஏ நா.கார்த்திக் கூறும்போது, ‘‘கோவையில் பல்வேறு இடங்களில், சாலைகளின் இரு புறங்களிலும், உரிய அனுமதியில்லாமல், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதபடி, போக்குவரத்துக்கு இடையூறாக அதிமுக சார்பில் கட் அவுட் வடிவ விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இது நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை மீறிய செயலாகும்.
கட்டிடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் தேவையின்றி கட் அவுட்டுகள், விளம்பரப் பதாகைகள் வைப்பதைத் தடுக்க வேண்டும், போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதா என அரசு கண்காணிக்க வேண்டும் என கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நீதிமன்றம் தொடர்ந்து எச்சரித்தும்கூட, கோவையில் அவை மதிக்கப்படாத நிலை தொடர்கிறது.
நீதிமன்றத்தின் அறிவுரைக்குப் பின்னரும், இதுபோன்ற மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து அதிமுகவினர் ஈடுபடுவதற்கு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். விதிகளை மீறி வைக்கப்பட்ட விளம்பரப் பதாகைகளை அகற்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், முதல்வர் வரும் சிங்காநல்லூர், சவுரிபாளையம், உப்பிலிபாளையம் போன்ற வழித்தடங்களில் சாலையோரங்களில் ஏழை, எளிய மக்கள் வைத்திருக்கும் கடைகளை மூடக் காவல்துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்’’ என்றார்.
மண்டலங்களில் வாங்கியிருப்பர்
இந்த விளம்பரத்துக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா எனக் கருத்துக் கேட்க, மாநகரக் காவல்துறை உயரதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் அழைப்பை எடுக்கவில்லை.
மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் கூறும்போது, ‘‘விளம்பரப் பதாகைகள் இடையூறாக வைக்கப்பட்டுள்ளதாக இதுவரை எங்களுக்குப் புகார்கள் வரவில்லை. அந்த விளம்பரப் பலகைகளுக்கு மண்டல அளவில் அனுமதி வாங்கியிருப்பார்கள்’’ என்றார்.