

கேரள மாநில லாரி அதிபரிடம் மாமூல் கேட்ட சேரம்பாடி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தவேலுவை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் காவல் நிலையத்திலேயே கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி காவல்நிலைய ஆய்வாளராக ஆனந்தவேலு உள்ளார்.
கேரள லாரி அதிபரான பின்ஸ் என்பவர் கேரளா- தமிழகம் இடையே மணல், ஜல்லி ஆகியவற்றை டிப்பர் லாரிகள் மூலம் கொண்டுவந்து தொழில் செய்துள்ளார்.
இந்நிலையில் சேரம்பாடி காவல்நிலைய ஆய்வாளர் ஆனந்தவேலு, பின்ஸிடம் மாதந்தோறும் தனக்கு மாமூல் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பின்ஸ் உதகையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
அதனடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் சீதாலட்சுமி, உதவி ஆய்வாளர் ரங்கநாதன் ஆகியோர் சேரம்பாடி காவல் நிலையம் வந்தனர். ஆய்வாளர் ஆனந்தவேலு, பின்ஸிடம் மாமூல் பெறும்போது நேரடியாகக் காவல் நிலையத்திலேயே பிடிபட்டார். உடனே போலீஸார் அங்கேயே கைது செய்தனர்.
கைதான ஆய்வாளர் ஆனந்தவேலுவை, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்.