குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு 62.46 லட்சம் கேக்குகள்: 4 நிறுவனங்களுடன் ஒப்பந்தம்

நவ.9 முதல் 11-ம் தேதிக்குள் விநியோகிக்க நடவடிக்கை
கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on: 
1 min read

சென்னை: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 62.46 லட்சம் கேக் பாக்கெட்கள் கொள்முதல் செய்ய 4 நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட் டுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நடப்பாண்டு குழந்தைகள் தினத்தையொட்டி தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மதிய சத்துணவுடன் ஸ்பாஞ்ச் கேக் வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 62.46 லட்சம் கேக் துண்டுகளைக் கொள்முதல் செய்வதற்கான குறுகியகால டெண்டர் கடந்த அக்.11-ம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி பிரிட்டானியா, ட்ரீம் பேக், எலைட் நேச்சுரல் மற்றும் ஐடிசி ஆகிய 4 நிறுவனங்களுக்கு கேக் விநியோகத்துக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

பிரிட்டானியா நிறுவனம் 45 கிராம் எடையுள்ள 10 லட்சத்து 3,996 கேக்குகள், ட்ரீம் பேக் நிறுவனம் 45 மற்றும் 50 கிராம் எடையுள்ள 33 லட்சத்து 87,459 கேக்குகள், எலைட் நேச்சுரல் நிறுவனம் 45 கிராம் எடையுள்ள 10 லட்சத்து 6,861 கேக்குகள், ஐடிசி நிறுவனம் 43.2 கிராம் எடையுள்ள 8 லட்சத்து 48,096 கேக்குகள் என மொத்தம் 62 லட்சத்து 46,412 கேக்பாக்கெட்டுகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன.

இதற்கான ஒப்பந்த மதிப்பு ரூ.7.34 கோடியாகும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் உட்பட மாவட்டங்களுக்கு பிரிட்டானியா கேக்குகளை வழங்க உள்ளது.

அரியலூர், கடலூர், சேலம், மதுரை, திருச்சி உட்பட 20 மாவட்டங்களுக்கு ட்ரீம் பேக் நிறுவனமும், ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு எலைட் நேச்சுரல் நிறுவனமும், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஐடிசி நிறுவனமும் கேக்குகளை விநியோகம் செய்யவுள்ளன.

தரப் பரிசோதனை பள்ளிகளில் கேக்குகள் நவ.9 முதல் 11-ம் தேதிக்குள் விநியோகம் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரே வகையான கேக் மட்டுமே வழங்கப்படும். கேக்குகளின் தரம், அளவு, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, உணவுப் பாதுகாப்பு உரிம விவரங்கள் உள்ளிட்டவை சரிபார்க்கப்படும்.

மேலும் கிடங்குகளில் இருந்து பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு முன்பு உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கேக்குகளின் தரத்தைப் பரிசோதனை செய்வார்கள் என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 24 அக்டோபர் 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in