Published : 22 Jan 2021 06:04 PM
Last Updated : 22 Jan 2021 06:04 PM

4 மீனவர்கள் படுகொலை; இத்தாலிய வீரர்களைப் போல இலங்கைக் கடற்படையினரையும் கைது செய்ய வேண்டும்: ராமதாஸ்

4 மீனவர்கள் கொல்லப்பட்ட பிரச்சினையை மத்திய அரசு மிகவும் மென்மையாகக் கையாள்வதாகத் தெரிகிறது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரிடமும், டெல்லியில் உள்ள இலங்கைத் தூதருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூலமாகவும் கண்டனம் தெரிவித்ததுடன் மத்திய அரசு அதன் கடமையை முடித்துக் கொண்டது என ராமதாஸ் விமர்சித்துள்ளார்

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:.

''வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 4 பேர் சிங்களக் கடற்படையினரால் கொடுமைப்படுத்தப்பட்டு, கடலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் இறையாண்மைக்குச் சவால் விடக்கூடிய இந்தத் தாக்குதல் சம்பவத்திற்காக இலங்கை அரசுக்கு இந்திய வெளியுறவுத்துறை கண்டனம் மட்டும் தெரிவித்திருப்பது போதுமானதல்ல.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மெசியா (வயது 30) , உச்சிப்புளியைச் சேர்ந்த நாகராஜ் (52), மண்டபத்தைச் சேர்ந்த சாம் (28), தாதனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (32) ஆகிய நால்வரும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியிலிருந்து வங்கக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவுக்கும், நெடுந்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களின் படகு மீது சிங்களக் கடற்படையினர் கப்பலை மோதி தாக்கியதில், மீனவர்களின் விசைப்படகு கவிழ்ந்து நால்வரும் உயிரிழந்ததாகச் செய்திகள் வெளிவந்தன.

ஆனால், தமிழக மீனவர்கள் நால்வரையும் சிங்களப் படையினர் கொடூரமான முறையில் கொடுமைப்படுத்தியதாகவும், அவர்களை நெருப்பால் சுட்டு படகில் போட்டு மூழ்கடித்துக் கொன்றதாகவும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, ஏற்கெனவே பல முறை தமிழக மீனவர்களை விரட்டியடித்தபோது, ‘‘உங்களையெல்லாம் ஒரு நாள் கடலில் மூழ்கடித்துக் கொல்லப் போகிறோம்’’ என்று சிங்களப் படை மிரட்டியதாகவும் மீனவர்கள் கூறியுள்ளனர்.

இவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, சிங்களக் கடற்படையினர் திட்டமிட்டு தமிழக மீனவர்களைக் கடலில் மூழ்கடித்துப் படுகொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா? என்பது விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும் என்றாலும்கூட, தமிழக மீனவர்கள் நால்வரின் இறப்புக்கு சிங்களக் கடற்படையினரின் தாக்குதல்தான் காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

தமிழக மீனவர்கள் ஒருவேளை எல்லை தாண்டிச் சென்று மீன் பிடித்திருந்தாலும்கூட, அவர்களைக் கைது செய்து, பின்னர் இந்தியாவிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். அதுதான் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மையக்கரு ஆகும். ஆனால், அதை மீறி தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் கொடூரமாகப் படுகொலை செய்துள்ளனர். இதை சாதாரணமான குற்றமாகக் கருதக்கூடாது.

இந்தியாவின் இறையாண்மை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதி, அதற்குப் பதிலடி தரும் வகையில் சிங்களப் பேரினவாத அரசுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும். மாறாக, இந்தப் பிரச்சினையை மத்திய அரசு மிகவும் மென்மையாகக் கையாள்வதாகத் தெரிகிறது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சரிடமும், டெல்லியில் உள்ள இலங்கைத் தூதருக்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் மூலமாகவும் கண்டனம் தெரிவித்ததுடன் மத்திய அரசு அதன் கடமையை முடித்துக்கொண்டது. இந்நடவடிக்கை போதுமானதல்ல.

கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ம் தேதி கேரளத்தையொட்டிய கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இத்தாலிய எண்ணெய்க் கப்பலுக்குக் காவலாக வந்த இத்தாலியக் கடற்படை வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதற்காக இத்தாலிய வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இப்போதும் அவர்கள் மீதான வழக்கு பன்னாட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தமிழக மீனவர்களுக்குக் கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்படவுள்ளது. அது தவிர, நல்லெண்ண உதவியாக மீனவர்கள் குடும்பங்களுக்கும் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கவும் இத்தாலி அரசு முன்வந்தது.

அதேபோல், இந்த வழக்கிலும் மீனவர்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமான சிங்களக் கடற்படையினரைக் கைது செய்ய வேண்டும். இலங்கை அரசிடமிருந்து இரு மீனவர்களின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 கோடி கோடி இழப்பீடு பெற்றுத் தருவதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x