

தமிழக்கத்தில் சட்டம் ஒழுங்கு பணியிலுள்ள போலீஸாரை தனிப்படைக்கு அனுப்புவதை கைவிடக்கோரிய வழக்கில் உள்துறை செயலர், டிஜிபி பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த முருககணேஷ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
காவல் நிலையங்களில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்புப் பணியை கவனித்து வரும் போலீஸார், பல்வேறு வழக்குகளை விசாரிக்க அமைக்கப்படும் தனிப்படைக்கு அனுப்பப்படுகின்றனர்.
சட்டம் ஒழுங்குப் பிரச்சினை மற்றும் தனிப்படை விசாரணையில் கவனம் செலுத்துவதால் போலீஸார் போதிய ஓய்வு கிடைக்காமல் மன உளைச்சல் அடைகின்றனர்.
இதனால் காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காக வருவோரைக் கடுமையாகத் தாக்குகின்றனர். இதற்கு சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் இருவரும் போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டது சிறந்த உதாரணமாகும். பல போலீஸார் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மதுரையில் 22 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள், 16 குற்றப்பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. இந்தக் காவல் நிலையங்களில் 1025 போலீஸார் இருக்க வேண்டும். ஆனால் அந்தளவு போலீஸார் இல்லை.
ஒரு காவல் நிலையத்தில் 30-க்கும் மேற்பட்டோர் இருந்தால் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தனிப்படை பணிக்கு அனுப்பப்படுகின்றனர். மீதமுள்ள போலீஸார் மட்டுமே காவல் நிலையப் பணியில் உள்ளனர்.
எனவே, காவல்நிலையங்களில் சட்ட ஒழுங்கு பாதுகாப்புப் பணியில் உள்ள போலீஸாரை தனிப்படை விசாரணைக்கு ஒதுக்குவதைக் கைவிடவும், இதற்கு தனி விதிமுறைகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, தமிழக உள்துறை செயலர், டிஜிபி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 19-க்கு ஒத்திவைத்தது.