தேவகோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 79 பவுன் நகை, ஆறரைக் கிலோ வெள்ளி கொள்ளை: தடயத்தை அழிக்க மல்லிப்பொடி தூவிச் சென்ற கொள்ளையர்கள்

தேவகோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 79 பவுன் நகை, ஆறரைக் கிலோ வெள்ளி கொள்ளை: தடயத்தை அழிக்க மல்லிப்பொடி தூவிச் சென்ற கொள்ளையர்கள்
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து 79 பவுன் நகை, ஆறரைக் கிலோ வெள்ளிப் பொருட்கள், ரூ.12 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். மேலும் தடயத்தை அழிக்க மல்லிப்பொடி தூவி சென்றனர்.

தேவகோட்டை அருகே கோட்டூரைச் சேர்ந்தவர் கார்மேகம். இவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தநிலையில், இவரது மனைவி ராஜாமணி மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

மேலும் அவர்களது மூத்த மகன் ரமேஷ் திருச்சியிலும், இளைய மகன் சுரேஷ் சிங்கப்பூரிலும் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்காக இரண்டு மகன்களும் தங்களது குடும்பத்துடன் சொந்த ஊருக்கு வந்திருந்தனர். பொங்கல் முடிந்து அனைவரும் ஊருக்கு சென்ற நிலையில் மூத்த மருமகள் ராதிகா மட்டும் ராஜாமணியுடன் தங்கியிருந்தார். இருதினங்களுக்கு ராஜாமணி, ராதிகா இருவரும் துக்க நிகழ்வுக்காக வெளியூர் சென்றனர்.

இந்நிலையில் இன்று காலையில் வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு இரும்பு கம்பியால் உடைக்கப்பட்டிருந்தது. அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ராஜாமணியில் 9 பவுன் நகை, சின்ன மருமகள் காவேரியில் 70 பவுன் நகை, ஆறரை கிலோ வெள்ளி, ரூ.12 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது.

துணிகள், பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் கொள்ளையர்கள் தடயத்தை அழிக்க சமயலறையில் இருந்த மல்லிப்பொடியை எடுத்து வீடு முழுவதும் தூவிவிட்டுச் சென்றிருந்தனர்.

தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வேலாயுதப்பட்டணம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in