Last Updated : 22 Jan, 2021 03:43 PM

 

Published : 22 Jan 2021 03:43 PM
Last Updated : 22 Jan 2021 03:43 PM

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு பாஜக வலுவாக உள்ளது: மாநிலப் பார்வையாளர் சி.டி.ரவி கருத்து

திருநெல்வேலி

தமிழகத்தில் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் போட்டியிடும் அளவுக்கு பாஜக வலுவாக உள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும் மாநிலப் பார்வையாளருமான சி.டி.ரவி தெரிவித்தார்.

பாஜக சார்பில் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சி.டி. ரவி பங்கேற்று தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். கூட்டத்தில் மாநில தலைவர் எல். முருகன், துணை தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களிடம் சி.டி.ரவி கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பணியில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். தமிழகத்தில் பாஜக நடத்தி வெற்றிவேல் யாத்திரை வெற்றியடைந்துள்ளது.

அதுபோல் கட்சி சார்பில் நடத்தப்பட்ட நம்ம ஊர் பொங்கல் விழாவும் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது.

மத்திய அரசு தமிழகத்துக்கு பலகோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறது. மோடி மக்கள் மத்தியில் எப்போதெல்லாம் பேசுகிறாரோ, அப்போதெல்லாம் திருக்குறள், பாரதி, கம்பராமாயணம் பற்றியும் பேசுகிறார்.

வரும் தமிழக சட்டப் பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும். தமிழகம் முழுவதும் 234 சட்டப் பேரவை தொகுதியிலும் போட்டியிடம் அளவுக்கு பாஜக வலுவாக உள்ளது.

வெற்றி நிலவரங்களை பொருத்து ஏ,பி,சி என தொகுதிகளைப் பிரித்துள்ளோம். இதில் ஏ பிரிவில் உள்ள தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் அளவிற்கு பலமாக உள்ளது. பி பிரிவில் இன்னும் கட்சியைப் பலப்படுத்த வேண்டியுள்ளது. சி பிரிவில் பலவீனமாக உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்ட பிறகு அடுத்த கட்ட அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தார். ஏ பிரிவில் என்னென்ன தொகுதிகள் இருக்கிறது என்று கேட்டபோது அவர் பதிலளிக்க மறுத்து விட்டார்.

சசிகலா விடுதலை ஆவதால் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படுமா என்று கேட்டபோது, பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.

ராமேஸ்வரத்தில் 4 மீனவர்கள் இலங்கை கடற்படையால் உயிரிழந்த சம்பவத்தில் மீனவர்கள் கச்சத்தீவு வரை சென்று போராட்டம் நடத்த உள்ளது குறித்து கேட்டபோது, கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது யார்? நாங்கள் அல்ல கச்சத்தீவு பிரச்சினைக்கு திமுக, காங்கிரஸ்தான் முழுப் பொறுப்பு என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x