

கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரையில் வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுப் பெண்ளுக்கான விழிப்புணர்வு போலப்போட்டி நடைபெற்றது.
தேசிய வாக்காளர் தினம் வருகிற 25ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரையில் இன்று மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது.
இதில் வாக்களிப்பதன் அவசியம், மற்றும் வாக்கின் வலிமையை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் பெண்கள் வண்ண வண்ண கோலமிட்டனர்.
ஓட்டு விற்பனைக்கு அல்ல. ஓட்டளிப்பது நம் கடமை, நமது உரிமை போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் கோலங்களில் இடம்பெற்றிருந்தன.
இதை கன்னியாகுமரி வந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் பார்வையிட்டனர்.
கோலப்போட்டியின்போது சிலர், 'அம்மா வழியில் நல்லாட்சி ' என்ற வாசகத்துடன் கோலமிட்டனர். இதை அங்கு பார்வையாளர்களாக நின்ற வருவாய்த்துறை அலுவலர்கள் அழிக்குமாறும், கட்சி சாயமின்றி கோலம் வரையவேண்டும் எனவும் வலியுறத்தினர்.
இதைத்தொடர்ந்து அந்தக் கோலம் அளிக்கப்பட்டது. வாக்காளர் தின விழிப்புணர்வு கோலப்போட்டி நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், பத்மனாபபுரம் சார் ஆட்சியர் சரண்யா அறி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கோலப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தேசிய வாக்காளர் தினத்தன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.