

சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் நீட் தேர்வில் உள் ஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சமூக நீதிக்கு எதிரான மனுவை உடனடியாகத் திரும்பப் பெறவில்லையெனில், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை:
“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் உள் ஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 10 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில்தான் மத்திய அரசு இத்தகைய மனுவைத் தாக்கல் செய்திருக்கிறது.
இந்த மனுவில், 'ஒரே நாடு, ஒரே தகுதி' என்ற அடிப்படையில் மருத்துவப் படிப்புகளில் தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கையை ஊக்கப்படுத்தக் கடந்த 2016-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அரசுப் பள்ளிகளில் படித்தார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அந்த மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கினால், அது கல்வியின் தரத்தைப் பாதிக்கும்.
இதேபோன்று தமிழகத்திலும் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டைத் தமிழக அரசு வழங்கியுள்ளது. ஆனால், அந்த விவகாரம் மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்படவில்லை. இதுபோன்று இட ஒதுக்கீட்டைக் கொண்டு வரப் பிற மாநிலங்களும் முயன்றால் தகுதியானவர்களுக்கு மருத்துவப் படிப்பு இடங்களுக்கான சீர்திருத்தம் சிதைக்கப்படும்' என்று கூறப்பட்டிருக்கிறது.
சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைக்க இதைவிட வேறு வாதங்களை எவரும் முன்வைக்க முடியாது. இதன் மூலம் சமூக நீதிக்கு எதிராகவும், ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்பைச் சீரழிக்கும் முயற்சியாகவே மத்திய பாஜக அரசின் மனுத்தாக்கல் அமைந்திருக்கிறது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு நீட் தேர்வில் நடப்பாண்டில் அமலுக்கு வந்தது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளில் படித்த 313 மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளிலும், 92 மாணவர்களுக்குப் பல் மருத்துவக் கல்லூரிகளிலும் ஆக மொத்தம் 405 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இது கடந்த 2017இல் 7, 2018இல் 5, 2019இல் 1 என்ற அளவில்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைத்தது. ஏற்கெனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிர்க்கட்சிகளின் அழுத்தத்தின் காரணமாகத் தமிழக அரசு கொண்டு வந்த உள் ஒதுக்கீட்டின் விளைவாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரளவு வாய்ப்பும், நியாயமும் கிடைத்திருக்கிறது.
உள் ஒதுக்கீடு வழங்கிய பிறகும் கூட, தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 3,400 இடங்களில் 405 அரசுப் பள்ளி மாணவர்களுக்குத்தான் வாய்ப்பு கிடைத்துள்ளது. மீதி இடங்கள் யாருக்குக் கிடைத்திருக்கிறது என்பதை ஆய்வு செய்தால் மருத்துவக் கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு எத்தகைய வாய்ப்புகள் கிடைக்கின்றன என்பதை முடிவு செய்து கொள்ளலாம்.
சமநிலைத் தன்மையற்ற அடிப்படையில் மாணவர்களுக்கான நீட் தேர்வு நடத்தப்பட்டதால் கடந்த காலங்களில் தமிழக மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வந்தார்கள். இதன் காரணமாகத்தான் மருத்துவக் கல்லூரியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா உள்ளிட்ட 16 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இத்தகைய கொடுமைகளுக்குப் பிறகும் மத்திய பாஜக அரசு உயர் நீதிமன்றத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதால் மருத்துவக் கல்வியின் தரம் குறைந்துவிடும் என்ற வாதத்தை முன்வைப்பது சமூக நீதிக்கு எதிராக விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். மத்திய பாஜக அரசின் இத்தகைய சமூக நீதிக்கு எதிரான போக்கைத் தமிழகம் ஒருபோதும் அனுமதிக்காது.
எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உடனடியாக திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டுமெனத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். சமூக நீதிக்கு எதிரான அந்த மனுவைத் திரும்பப் பெறவில்லையெனில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய பாஜக அரசை எச்சரிக்கிறேன்”.
இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.