

ஒவ்வொரு தனி நபருக்கும் சட்ட உதவி வழங்க வேண்டும் என நீதியரசர் கே.சந்துரு வலியுறுத்தியுள்ளார்.
மகளிர் சட்ட உதவி மன்றத்தின் வெள்ளி விழா கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மன்றத்தின் தலைவர் இரா.வைகை தலைமை வகித்தார். துணைச் செயலாளர் ஆர்.பிரசாத் வரவேற்றார். விழாவை தொடங்கி வைத்து சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா தேவன் பேசியதாவது:
பெண்களுக்கு எதிராக நிகழ்ந்துவரும் வன்முறைகள் ஒவ்வொரு நாளும் நமது நம்பிக்கையை தகர்த்து வருகிறது. ஒரு பெண்ணுக்கு கல்வி அறிவும், சொந்தக் காலில் நிற்கும் தன்னம்பிக்கையும் கிடைத்துவிட்டால் பாதி கிணறு தாண்டிவிட்டாள் என்று அர்த்தம். மேலும், ஆண்களின் உதவியும் கிடைத்துவிட்டால் அவர்கள் மீதி கிணற்றையும் தாண்டிவிடுவர்.
தொலைக்காட்சி தொடர்கள் பெண்களுக்கு எதிராக உள்ளன. தாங்கள் பலவீனமானவர்கள் இல்லை என்பதை பெண்கள் தங்களது மேலதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். ஆணுக்கு நிகராக பெண்ணையும் பார்க்க வேண்டும். குடும்பத்தில் பிள்ளை களுக்கு சமத்துவத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். பெண் களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த செய்திகள் வராத அளவுக்கு குற்றங்கள் குறைய வேண்டும். அதுவரை அனைவரும் போராட வேண்டும்.
இவ்வாறு பிரபா தேவன் கூறினார்.
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு பேசியதாவது:
பெண்கள் பொது வெளியில் பேசும்போதும், மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் போராடுகிற போதும்தான் அவர்களின் பிரச்சினைகள் தெரியவருகின்றன. அந்தப் பிரச்சினைகளுக்கு ஏற்ப சட்டத்தைத் திருத்த வேண்டிய அவசியம் எழுகிறது. பதவியேற்று ஒரு வருடம்கூட பூர்த்தி செய்யாத நீதிபதி, வரதட்சணை வழக்குகள் அனைத்தும் பொய்யானவை, பாலியல் வழக்குகள் தவறா னவை என்று தீர்ப்பெழுதும் நிலை உள்ளது. வன்புணர்ச்சி செய்தவ னோடு சென்று குடும்பம் நடத்த உத்தரவிடுகிறார் மற்றொரு நீதிபதி. இதுதான் நீதிமன்றத்தின் நிலை.
ஒவ்வொரு தனி நபருக்கும் சட்ட உதவி கிடைக்க வேண்டும். அதேநேரத்தில் நீதி முறையை அமைப்புரீதியாக எதிர்த்து போராட வேண்டும். நீதிபதிகள் தவறான சிந்தனையோடு, சர்வாதிகாரப் போக்கோடு தருகிற தீர்ப்புகளை, நிர்பயா போன்ற ஒன்றிரண்டு வழக்குகளால் மாற்ற முடியாது. சாதாரண மக்களின் உணர்வுகளை நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் அறிவு பூர்வமாக, உணர்வுபூர்வமாக உணரச் செய்ய வேண்டும். அதற்கான அணுகுமுறையை ஏற்படுத்துவதற்கான செயல் திட்டத்தை மாதர் சங்கம் வகுக்க வேண்டும். அதற்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு சந்துரு கூறினார்.