மக்களின் அஜாக்கிரதை: புதுச்சேரியில் ஆழ்கடலெங்கும் பரவிக் கிடக்கும் முகக் கவசங்கள்

மக்களின் அஜாக்கிரதை: புதுச்சேரியில் ஆழ்கடலெங்கும் பரவிக் கிடக்கும் முகக் கவசங்கள்
Updated on
1 min read

சரியான முறையில் அப்புறப்படுத்தாத காரணத்தினால் கடலின் ஆழப் பகுதியில் பயனற்ற முகக் கவசங்கள் பரவிக் கிடப்பதாக ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் குறிப்பிட்டார்.

புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதியில் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி நடத்தி வருபவர் அரவிந்த். புதுச்சேரியைச் சேர்ந்த இவர் ஆழ்கடலில் நீச்சல் பயிற்சி தருவார். கரோனா காலத்தில் ஆழ்கடலில் சென்றபோது கடல் தூய்மையாக இருந்ததாக வீடியோ வெளியிட்டிருந்தார்.

அப்போது மக்கள் நடமாட்டம் இன்றியும் பயனற்ற பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் இன்றியும் கடலின் ஆழப் பகுதி சுத்தமாக இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அவர் குறிப்பிட்டிருந்தார்.

அண்மையில் புயல், அதைத் தொடர்ந்து பெய்த தொடர் மழை காரணமாக ஆழ்கடலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை அவர் கண்டறியச் சென்றார். அப்போது ஆழ்கடலில் பல பகுதிகளில் முகக் கவசங்கள் பரவிக் கிடப்பதாகத் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "பொதுமக்கள் பயன்படுத்திய முகக் கவசங்களை முறையாக அப்புறப்படுத்தாமல் தூக்கி வீசியதால் அவை மழையால் கால்வாயில் விழுந்து அவை கடலுக்குள் வந்துள்ளன. கடலின் ஆழப் பகுதியில் பயனற்ற முகக் கவசங்கள் கிடப்பதைப் பார்த்தேன். அதில் ஏராளமானவற்றைக் கையோடு எடுத்து வந்தேன்.

கடலை மாசுபடுத்தாமல் இருக்க பொதுமக்கள் முகக் கவசத்தை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். குறிப்பாக புதுச்சேரியில் இருந்து சென்னை கிழக்கு கடற்கரை சாலைப் பகுதிகளில் அதிக அளவில் முகக் கவசங்களைப் பார்த்தேன்" என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in