Published : 22 Jan 2021 03:17 AM
Last Updated : 22 Jan 2021 03:17 AM

பால் தினகரன் வீடு, அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் 2-வது நாளாக சோதனை

சென்னை

வரிஏய்ப்பு புகார் மற்றும் வெளிநாட்டு பண முதலீடு தொடர்பாககோவை காருண்யா பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரனின் வீடு, அலுவலகங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் 2-ம் நாளாக நேற்று சோதனை நடத்தினர்.

கோவை காருண்யா பல்கலைக்கழக வேந்தராக இருப்பவர் பால் தினகரன். ‘இயேசு அழைக்கிறார்’ என்ற அமைப்பின் தலைவராகவும் உள்ளார். சென்னை அடையாறு டிஜிஎஸ் தினகரன் சாலையில் உள்ள ‘இயேசு அழைக்கிறார்’ அமைப்பின் தலைமை அலுவலகம், பாரிமுனை கடற்கரை ரயில் நிலையம் எதிரே உள்ள இயேசு அழைக்கிறார் கட்டிடம், கோவை காருண்யா பல்கலைக்கழகம், கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் காருண்யா கிறிஸ்தவப் பள்ளி, சென்னை அடையாறு ஜீவரத்தினம் நகரில் உள்ள பால் தினகரனின் வீடு, தாம்பரத்தில் உள்ள சீசா அறக்கட்டளை, கோவையில் உள்ள காருண்யா பள்ளி அலுவலகங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் என இவருக்கு சொந்தமான 28 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி சோதனை நடத்தினர். 200-க்கும்மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இதில், 3 இடங்களில் மட்டுமே சோதனை நிறைவடைந்தது. மீதமுள்ள 25 இடங்களில் நேற்று 2-ம் நாளாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

‘இயேசு அழைக்கிறார்’ அமைப்புக்கு வந்த வெளிநாட்டு பண உதவிகள், வரி ஏய்ப்பு தொடர்பாக வந்த புகார்களின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பால் தினகரன் குடும்பத்துடன் கனடாவுக்கு சென்றுள்ளார். சென்னை திரும்பியதும், அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x