Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

இலங்கை கடற்படையினர் தாக்குதலில் மீனவர்கள் உயிரிழப்பு: தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 4 தமிழக மீனவர்கள் உயிரிழந்த சம்பவத்துக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்: கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி, விசைப்படகோடு மூழ்கடித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. தங்கள் வாழ்வாதாரத்துக் காகவும், மீன்பிடி உரிமையின் அடிப்படையிலும் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், இழப்பீடுகள் எதுவும் கொடுக்கமாட்டோம் என்று இலங்கை கடற்படை அறிவிப்பதும் அடாவடியானது. இலங்கை அரசின் இந்த அட்டூழியங்களை மத்திய பாஜக அரசு தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்ப்பது மிகுந்த கவலையளிக்கிறது.

தமிழக மீனவர்களை மூழ்கடித்துக் கொன்றிருப்பதற்கு, பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இலங்கைக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும். இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 கோடி இழப்பீடு வழங்க இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.

தேமுதிக தலைவர் விஜய காந்த்: இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும். மேலும் உடற்கூறு ஆய்வை இந்தியாவில் நடத்த இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: 4 மீனவர்களின் உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கஇலங்கை அரசிடம் இந்திய அரசுவலியுறுத்த வேண்டும். அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுத் தர வேண்டும். இதுபோன்ற சம்பவம் இனியும் நடைபெறாமல் இருக்க இந்திய அரசு இலங்கை அரசிடம் உத்தரவாதம் பெற வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இதற்காக இலங்கை தூதரை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும். சமீபகாலமாக குறைந்திருந்த இலங்கை படையின் இத்தகைய கொடூர செயல்கள் மீண்டும் தொடங்குவதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக் கூடாது.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன்: தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை பிரதமர் மோடி கண்டிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற துயரங்கள் நடக்காமல் தடுக்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு மீனவர்களின் தொழிலையும், உரிமை மற்றும் உடைமைகளையும் பாதுகாக்க மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட 4 மீனவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் உயிரிழந்ததற்கு மத்திய அரசு தனது கடும் கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

இத்தகைய சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கும், தமிழக மீனவர்களின் உயிருக்கும், மீன்பிடித் தொழிலுக்கும் நிரந்தர பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதற்கும் இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும். மேலும், கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பத்தினரை பாதுகாக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x