

இந்தியாவில் தற்போது, இறால்களை தனிமைப்படுத்தலுக்காக நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் அமைப்பு மட்டுமே உள்ளது. நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வக வசதியை ஏற்படுத்துவதற்காக மத்திய மீன்வளத் துறை ரூ. 19 கோடியே 26 லட்சத்து 98ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
முதல் கட்டமாக ரூ.4 கோடிநிதியை நீர் வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகத்தின் கட்டுமான பணிக்காக வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசின் மீன்வளத் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டத்தில் படப்பை அருகில் மூன்று ஏக்கர் நிலம், நீர் வாழ் உயிரின தனிமைப்படுத்தல் மற்றும் நோய் கண்டறியும் ஆய்வகம் உருவாக்கத்துக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், படப்பையில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் நீர்வாழ் உயிரின தனிமைப்படுத்துதல் மற்றும் நோய்கண்டறியும் ஆய்வகத்துக்கு அடிக்கல் நாட்டினர்.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியதாவது: 1947 முதல் 2014-ம் ஆண்டு வரை ரூ.3,700 கோடி அளவிலேயே மீன்வளத் துறைக்கு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு கடந்த 6 ஆண்டுகளில் ரூ.27 ஆயிரம் கோடிமுதலீடு செய்து மீன்வளத் துறையை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றுள்ளது. மேலும் தமிழக அரசு கொண்டுவரும் அனைத்துத் திட்டங்களுக்கும், மத்திய அரசு ஒப்புதல் தரத் தயாராக உள்ளது என்றார்.
இதில் மத்திய மீன்வளத் துறை செயலர் ராஜீவ் ரஞ்சன், தமிழக மீன்வளத் துறை முதன்மைச் செயலர் கே.கோபால், தமிழக மீன்வளத் துறை ஆணையர் ஜெயகாந்தன், காஞ்சி ஆட்சியர் மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, மாதவரம் வண்ண மீன் வானவில் தொழில்நுட்பப் பூங்காவை கிரிராஜ் சிங் பார்வையிட்டார். அப்போது,வண்ண மீன் வளர்ப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்த அவர், மீன் வளர்ப்போர் பயன்பெறும் வகையில் மீன்வளப் பல்கலைக்கழகம் உற்பத்தி செய்துள்ள 3 தீவனங்களை அறிமுகப்படுத்தினார்.
தொடர்ந்து, மாதவரத்தில் உள்ளஆவின் பால் உற்பத்தி மையத்தில் பால் உற்பத்தி, விநியோகம், தொழில்நுட்பம் குறித்து உயர்அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது, மீன்வளப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமாரன், ஆவின் நிர்வாக இயக்குநர் நந்தகோபால் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.