அரசியலில் ஈடுபட மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்: ஸ்டாலின்

அரசியலில் ஈடுபட மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும்: ஸ்டாலின்
Updated on
1 min read

தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி அரசியலில் ஈடுபட மாணவர்களை ஊக்குவிப்பது அவசியம் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:

மாணவர் பேரவைத் தேர்தலை நடத்தக்கோரி அண்ணா நினைவிடம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது.

அனைத்துக் கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்ட போதிலும் மாநிலக் கல்லூரியில் மட்டும் நடத்தப்படவில்லை. இது குறித்து மாணவர்கள் அளித்த மனுக்களுக்கு நிர்வாகம் உரிய பதிலளிக்கவில்லை. எனவே, நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்க சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். நிர்வாகத்திலும், கொள்கை முடிவுகளை எடுப்பதிலும் மாணவர்களின் பங்களிப்பை உறுதி செய்ய பேரவைத் தேர்தல் அவசியம்.

இந்த சூழலின் பின்னணியில்தான் இளம் பருவத்தில் உள்ள மாணவர்களை தமிழகத்தின் எதிர்கால நலன்கருதி அரசியலில் ஈடுபட ஊக்குவிப்பது அவசியமாகிறது. ஜனநாயகத்திலிருந்து மாணவர்களை ஒதுக்கி வைப்பது தமிழகத்தின் எதிர்காலத்துக்கு வலு சேர்க்காது. எனவே, கல்லூரி முதல்வரும், நிர்வாகமும் மாணவர்களுடன் மனம் திறந்து பேச்சு நடத்தி இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு காண வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in