Last Updated : 21 Jan, 2021 09:36 PM

 

Published : 21 Jan 2021 09:36 PM
Last Updated : 21 Jan 2021 09:36 PM

மாற்றுத்திறனாளிப் பெண்களின் மனுக்களை அலுவலக கீழ்தளத்திற்கு வந்துபெற்ற குமரி எஸ்.பி: பொதுமக்கள் பாராட்டு

குமரி எஸ்.பி. அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த மாற்றுத்திறனாளிப் பெண்களின் மனுக்களை அலுவலகக் கீழ்தளத்திற்கு வந்து எஸ்.பி. பத்ரிநாராயணன் பெற்றார். இந்த நடவடிக்கைக்குப் பொதுநல ஆர்வலர்களும் மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு தொடர்பாகப் பொதுமக்கள் பிரச்சினைகள் மீதான மனுக்களை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் பெற்று, அதன் மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்திற்கு, இன்று பலர் குடும்பப் பிரச்சினை தொடர்பான மனுக்களை அளிக்க வந்திருந்தனர்.

இதில் இரு மாற்றுத்திறனாளிப் பெண்கள் அலுவலக முதல் தளத்தில், கருத்தரங்கில் பங்கேற்றிருந்த எஸ்.பி.யிடம் நேரடியாகச் சென்று மனுக்களை வழங்க முடியாமல் கீழ் தளத்தில் இருக்கைகளிலும் உட்கார முடியாமல் தரையிலேயே அமர்ந்திருந்தனர்.

இதுபற்றி அறிந்த எஸ்.பி. பத்ரிநாராயணன் மேல் தளத்தில் இருந்து அலுவலக தரைத் தளத்திற்கு நடந்து வந்து, மாற்றுத்திறனாளிப் பெண்கள் இருவரின் மனுக்களையும் பெற்று, பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் மனுக்கள் மீதான பிரச்சினைக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அத்துடன் எஸ்.பி. அலுவலகத்திற்கு மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகள் வெகு நேரம் காத்திருப்பதைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுப்பதற்கும் போலீஸாருக்கு வலியுறுத்தினார். இந்த நடவடிக்கைக்குப் பொதுநல ஆர்வலர்களும் மக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x