

கோவில்பட்டியில் நடந்த விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 345 பயனாளிகளுக்கு 2.35 கோடி கடன் உதவிகளை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ வழங்கினார்.
கோவில்பட்டி பசுவந்தனை சாலையில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 25-வது கிளை திறப்பு விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தார்.
வங்கி கிளையை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ திறந்து வைத்தார். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குத்து விளக்கேற்றினார்.
தொடர்ந்து, புதுரோட்டில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி பிரதான கிளை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையத்தை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் திருநெல்வேலி மண்டலம் மூலம் அமைக்கப்பட்டுள்ள பெட்ரோல் பங்க்கை அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து, 345 பயனாளிகளுக்கு 2.35 கோடி கடன் உதவிகளை வழங்கி பேசும்போது, தமிழகத்தில் நஷ்டத்தில் இயங்கி வந்த கூட்டுறவு வங்கிகளை லாபத்தில் இயங்க வைத்து இன்று வருமான வரி செலுத்தும் அளவுக்கு கொண்டு வந்துள்ளோம். நான் அமைச்சராக பொறுப்பேற்கும் போது, 27 ஆயிரம் ரேஷன் கடைகள் தான் இருந்தது.
தற்போது 33,030 ரேஷன் கடைகளாக உயர்த்தி உள்ளோம். 60, 50 ரேஷன் கார்டுகள் உள்ள கிராமங்களில் உள்ளோர் ரேஷன் பொருட்கள் வாங்க 3 கி.மீ. செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இந்த மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக துறை ரீதியாக ஆய்வு நடத்தி, 3501 அம்மா நகரும் ரேஷன் கடைகள் தொடங்கி உள்ளோம். நான் பொறுப்பேற்கும் போதும் கூட்டுறவு வங்கியின் இருப்பு தொகை ரூ.26 ஆயிரம் கோடி. தற்போது 59,507 கோடி இருப்பு தொகை உள்ளது.
தனியார் வங்கிகளுக்கு இணையாக கூட்டுறவு வங்கிகளை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு வசதி செய்து கொடுத்துள்ளோம். அதிமுக ஆட்சி அமைந்த பின்னர் விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி வட்டியில்லா பயிர் கடன் வழங்கி சாதனை படைத்துள்ளோம்.
அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை 21 விருதுகளை பெற்றுள்ளது. திமுக ஆட்சி காலத்தில் கந்து வட்டி கொடுமை இருந்தது.
இதிலிருந்து மக்களையும், வியாபாரிகளையும் மீட்க வேண்டும் என்பதற்காக கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.50 ஆயிரம் கொடுத்து, அதனை 350 நாட்களில் 12 சதவீத வட்டியில் கட்டுவதற்காக வழிவகை செய்துள்ளோம். இதனால் 16,51,891 சாலையோர சிறு வணிகர்கள் பயன்பெற்றுள்ளனர். கந்து வட்டி கொடுமை என்பதையே மாற்றி உள்ளோம், என்றார் அவர்.
விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் போ.சின்னப்பன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ரா.சத்யா, கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் கே.சி.ரவிச்சந்திரன், இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் ச.லீ.சிவகாமி, துணை பொதுமேலாளர் காந்திமதிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.