

சேலம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் நடராஜன் இன்று, ஆஸ்திரேலியாவில் இருந்து சொந்த கிராமத்துக்குத் திரும்பினார்.
அவருக்குப் பொதுமக்கள் செண்டை மேளம் முழங்க, குதிரை பூட்டிய சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்துச் சென்று சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீரராக சேலம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் இடம் பெற்றிருந்தார். இவர் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்று, சிறப்பான பந்து வீச்சு மூலமாக இந்திய அணியின் வெற்றிக்குப் பக்கபலமாகத் திகழ்ந்தார்.
சிறிய கிராமத்தில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து, சிறப்பான பந்து வீச்சு மூலமாக உலகளாவிய புகழைப் பெற்ற நடராஜனுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தியா திரும்பினார். பெங்களூருவுக்கு விமானம் மூலம் வந்தடைந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், சொந்த ஊரான சின்னப்பம்பட்டிக்கு கார் மூலம் வந்தடைந்தார்.
சின்னப்பம்பட்டி பிரிவு சாலையில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள அவர் வீட்டுக்கு, குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் பொதுமக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். வழிநெடுகிலும் கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு, சாலையின் இருபுறம் பொதுமக்கள் நின்று, மலர் தூவி சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும், செண்டை மேளம் முழங்க நடராஜனை ஊர்வலமாக மக்கள் அழைத்துச் சென்றனர். அவருக்குப் பாராட்டுத் தெரிவிக்க அலங்கார மேடைகள் போடப்பட்டிருந்தன.
கரோனா தொற்றுப் பரவல் விதிமுறை அமலில் உள்ளதால், சுகாதாரத்துறை அதிகாரிகள் போலீஸாருடன் கிரிக்கெட் வீரர் நடராஜன் வீட்டுக்கு வந்து, பாராட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதைத் தெரிவித்தனர்.
மேலும், அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்துள்ளதால், 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறினர்.
இதனையடுத்து, கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு தேசியக் கொடியைப் போர்த்தி, மாலை அணிவித்து ஊர் மக்கள் பாராட்டுதல்களைத் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய காரணத்தால் கிரிக்கெட் வீரர் நடராஜன், பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு, பாராட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.