

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ரேஷன்கடைகளில் தரக்குறைவான அரிசி வழங்கியதாக அமைச்சர் ஜி.பாஸ்கரனிடம் கிராமமக்கள் புகார் தெரிவித்தனர். அவர்களை அமைச்சர் சமரசப்படுத்தினார்.
காளையார்கோவில் அருகே வலனை ரேஷன்கடை மூலம் வலனை, நேமம், முத்துப்பட்டணம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 250 அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகின்றன.
ஏற்கெனவே இப்பகுதியில் தொடர் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டது.
மேலும் இந்தாண்டும் தொடர் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் அப்பகுதியில் பெரும்பாலானோர் ரேஷன் அரிசியை வாங்கியே சமைக்கின்றனர்.
இம்மாதம் ரேஷன்கடையில் புழுத்துபோன தரமற்ற அரிசி வழங்கப்பட்டது. துர்நாற்றம் வீசுவதால் அந்த அரிசி சமைக்க முடியாமல், கால்நடைகளுக்கு கொட்டினர்.
இந்நிலையில் வெள்ளம் பாதிப்பு குறித்து அப்பகுதியில் கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆய்வு செய்தார்.
அப்போது புழுத்துப்போன அரிசி வழங்கியது குறித்து அமைச்சரிடம் கிராமமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை அமைச்சர் சமரசப்படுத்தினார். தொடர்ந்து வெள்ளம் பாதித்த மக்களுக்கு தனது சொந்த செலவில் தலா 5 கிலோ அரிசி வழங்கினார்.