பிப்.2-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்; ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது- இடைக்கால பட்ஜெட் தாக்கலாகிறது

பிப்.2-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டம்; ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது- இடைக்கால பட்ஜெட் தாக்கலாகிறது
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவையின் கூட்டம் வரும் பிப்.2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக, கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடத்தப்பட உள்ளது. இதில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடக்கும். கரோனா தொற்று காரணமாக தள்ளிப்போன நிலையில் பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது.

கடந்த முறை கரோனா தொற்று காரணமாக ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடந்தது. இம்முறையும் அவ்வாறே நடக்கும் என சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இந்தக்கூட்டத் தொடரின் முதல்நாளான பிப்ரவரி 2 அன்று ஆளுநர் உரை நிகழ்த்துவார். பின்னர் அவை ஒத்திவைக்கப்படும். அன்றே அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாட்கள் சபையை நடத்துவது என முடிவெடுக்கும். சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு முந்தைய கடைசி கூட்டத்தொடர் என்பதால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இம்முறை சட்டமன்றத்தின் இறுதிக் கூட்டம் என்பதால் காரசார விவாதங்கள் கடுமையாக இருக்கும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதால் 10 நாட்களுக்கு மேல் சட்டப்பேரவை நடக்க வாய்ப்புள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அலுவலக ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு தொற்று இல்லை என்றால்தான் அனுமதிக்கப்படுவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in