

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் எதுவுமே நடைபெறாமல் உள்ள நிலையில் திட்டச்செலவும் ரூ.2000 கோடியாக அதிகரித்துள்ளதால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை நியமிக்கக்கோரி மதுரை மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் மத்திய சுகாதாரத்துறைச் செயலரிடம் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
“மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 2019-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் எதுவுமே நடைபெறாமல் உள்ளது, இதே காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட மற்ற இடங்களில் எல்லாம் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பித்துவிட்டது.
இது தொடர்பாக இன்று இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் இணைச் செயலர் (எய்ம்ஸ்) நிலம்பூஜ் சரண் ஆகியோரை சந்தித்து கீழ் கண்ட கோரிக்கைகளை வைத்துள்ளேன்.
* மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கான செலவு 2,000 கோடியாக அதிகரித்துள்ளதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தரவுகளை வைத்துத் தெரியவந்துள்ளது, இதற்கென தேவைப்படும் "நிர்வாக அனுமதியை" (administrative sanction) உடனடியாக வழங்கவேண்டும்;
* இதற்கென கடன் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை விரைவாக கையெழுத்திட்டு செயல்படுத்தி வேலைகளை துரிதப்படுத்துவது.
* மதுரை எய்ம்ஸிற்கென, நிர்வாக இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர், துணை இயக்குனர் (நிர்வாகம்), மற்றும் நிர்வாக அலுவலர்களை உடனடியாக நியமித்து, இத்திட்டத்திற்கான நிர்வாக வேலைகளை விரைவுபடுத்த வேண்டும்”.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.