

முன்னாள் சபாநாயகர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் பாஜகவில் சேர்க்கப்பட்டது குறித்து தமக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை என புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவரும், காரைக்கால் பொறுப்பாளருமான வி.கே.கணபதி கூறியுள்ளார்.
காரைக்கால் தெற்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர் வி.கே.கணபதி. இவர் அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவருக்கு புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் மற்றும் காரைக்கால் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பொறுப்புகளை பெற்ற பின்னர், நேற்று(ஜன.20) இரவு முதன் முறையாக காரைக்காலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எனக்கு அந்தக் கட்சியில் ஒரு பிடிப்பு இல்லை, அதனால் பாஜகவில் இணைந்தேன். கடந்த 5 ஆண்டுகளாக புதுச்சேரியில் ஆட்சி செய்த காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு மாநிலத்தில் மிக மோசமான நிலையை உருவாக்கி விட்டது. இவர்களுக்கு ஆட்சி நடத்தவே தெரியவில்லை.
காங்கிரஸ் இல்லாத புதுச்சேரி என்ற முழக்கத்தை முன் வைத்து பாஜக அரசியலை முன்னெடுத்துள்ளது. அதற்கேற்றவகையில் காரைக்கால் மாவட்டத்தில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 20 நாட்களில் காரைக்காலில் பாஜக ராணுவக் கட்டுப்பாட்டுடன் தேர்தல் இலக்கை நோக்கிப் பயணித்து எங்களுக்குரிய வெற்றிக் கனியை பறிப்போம். நாங்கள் வெற்றி பெறுவது ஒரு பக்கம் இருந்தாலும், யார் வரக்கூடாதோ அவர்களையும் வரவிடாமல் செய்வோம்.
கூட்டணி குறித்து மேலிடம் முடிவு செய்யும். எங்களுடன் அதிமுக இருந்தால் அவர்களுக்கும் பலம், எங்களுக்கும் பலம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் எப்படியோ அப்படித்தான் புதுச்சேரியிலும் கூட்டணி அமையும். தமிழகத்தில் ஒரு கூட்டணி, புதுச்சேரிக்கு ஒரு கூட்டணி என்ற அவலை நிலை எங்களுக்கு ஏற்படாது. என்.ஆர்.காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை. அக்கட்சியும் இருந்தால் வலுவாகத்தான் இருக்கும்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 2 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பது பாஜகவின் தனி இலக்கு. நிச்சயம் ஒரு தொகுதியில் வெற்றி பெறுவோம். ஆளுநருக்கு எதிரான அமைச்சர் கந்தசாமியின் போராட்டம் ஒரு பொழுதுபோக்கு போல உள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளாக துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகள் சரியில்லாமல் போயிருந்தால் புதுச்சேரியை காங்கிரஸ்-திமுகவினர் கூறு போட்டு விற்றிருப்பார்கள் என்றார்.
புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருமலைராயன்பட்டினத்தைச் சேர்ந்த எழிலரசி, பாஜக மாநில தலைவர் முன்னிலையில் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”அது குறித்து எனக்கு தெரியாது, காரைக்கால் பொறுப்பாளர் என மாநிலத் தலைவர் சாமிநாதன் எனக்கு கடிதம் கொடுத்துள்ளார்.
ஆனால் எனக்கு இது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தான் கொடுத்த கடிதத்தை சாமிநாதனே மீறுகிறாரா? அப்படியெனில் எனக்கு இந்த பதவி தேவையில்லையே. யாரும் சேரலாம். அரசியலில் யாருக்கும் அக்மார்க் முத்திரை குத்த இயலாது. யாரும் யாரையும் கெட்டவர் என்று சொல்ல உரிமையில்லை. அது வேறு விஷயம். ஆனால் எனது உரிமையை நான் எப்போதும் விட்டுக் கொடுப்பதில்லை. இதற்கான சரியான முடிவு தெரியாமல் நான் ஓயமாட்டேன்.” இவ்வாறு வி.கே.கணபதி கூறினார்.