திருச்சியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி இறந்தவரின் உடல் மீட்பு- அனுமதியின்றி மாடிகளை கட்டியதாக மாநகராட்சி தகவல்

திருச்சியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விபத்து: இடிபாடுகளில் சிக்கி இறந்தவரின் உடல் மீட்பு- அனுமதியின்றி மாடிகளை கட்டியதாக மாநகராட்சி தகவல்

Published on

திருச்சியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி இறந்தவரின் உடல் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டது. இந்தக் கட்டிடம் அனுமதியின்றி கட்டப்பட்டது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜலாலுதீன் என்பவரின் பராமரிப்பில் 4 மாடிக் கட்டிடம் உள்ளது. இதனை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. எனினும் 2, 4 வது மாடி வீடுகளில் சிலர் குடியிருந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இக்கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் அங்கு குடியிருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். தகவலறிந்த திருச்சி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸார் விடிய விடிய மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 2-வது தளத்தில் சிக்கியிருந்த அஷ்ரப் ஷெரீப், ஷாகினா மற்றும் முகபுதீன், அவரது மகள் ரபியா ஆகியோர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 4-வது மாடியில் வசித்துவந்த பஷீர் அகமது இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்து கிடந்தார். சுமார் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் இவரது உடல் நேற்று அதிகாலை மீட்கப்பட்டது.

ஜலாலுதீனை கோட்டை போலீஸார் கைது செய்தனர். இரு தினங்களுக்கு முன், இதனருகில் ஆள்துளைக் கிணறு தோண்டியதும் விபத்துக்கு காரணம் என போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: இந்த கட்டிடம் 25 ஆண்டு பழமையானது. அனுமதி பெறாமல் கூடுதலாக 2 மாடிகளை எழுப்பியுள்ளனர். 2012-ல் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய ஆய்வில் இந்த முறைகேடு தெரியவந்தது. இதையடுத்து 2013-ல் கட்டிட உரிமையாளருக்கு எதிராக மாநகராட்சி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. அதில், ரூ.1000 அபராதம் செலுத்தி வழக்கு முடித்து வைக்கப்பட்டுவிட்டது. அதற்குபின் தற்போது இந்த விபத்து நடந்துள்ளது என்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in