Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

தமிழகத்துக்கு 2-ம் கட்டமாக 5 லட்சம் டோஸ் கோவிஷீல்டு: மத்திய அரசு அனுப்பி வைத்தது

சென்னை

தமிழகத்துக்கு இரண்டாவது கட்டமாக 5 லட்சத்து 8,500 கோவிஷீல்டு தடுப்பு மருந்தை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்துக்கு ஏற்கெனவே5 லட்சத்து 36,500 டோஸ் கோவிஷீல்டு, 20 ஆயிரம் டோஸ் கோவேக்ஸின் தடுப்பு மருந்தை மத்திய அரசு அனுப்பி வைத்தது. தமிழகத்தில் 160 மையங்களில் கோவிஷீல்டும், 6 மையங்களில் கோவேக்ஸின் தடுப்பூசியும் போடும் பணி கடந்த 16-ம் தேதி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு

இந்நிலையில், இரண்டாவது கட்டமாக தமிழகத்துக்கு 5 லட்சத்து 8,500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து விமானம் மூலம் நேற்று சென்னை வந்தது. இவை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டது. இவற்றை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆய்வுசெய்தார். அப்போது, பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உடன் இருந்தார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

2 தவணைகளாக தடுப்பூசி

தமிழகத்துக்கு இதுவரை 10.65 லட்சம் தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. ஒருவருக்கு 2தவணைகளாக தடுப்பூசி போடவேண்டும். தற்போது இருப்பில் உள்ள மருந்தை கொண்டு 5.32 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடமுடியும். தமிழகத்தில் முதல்கட்டமாக தடுப்பூசி போடப்படவுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள்உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் 6 லட்சம் பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொடக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் பலருக்குதயக்கம் இருந்தது. ஆனால், தற்போது அனைத்தும் சரியாகிவிட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் தயக்கமின்றி தடுப்பூசியை போட்டுக் கொள்கின்றனர். நானும் வரும் 22-ம் தேதி சென்னை அரசு பொது மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள இருக்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x