Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 6.26 கோடியாக உயர்வு: பெண் வாக்காளர்கள் 9.90 லட்சம் அதிகம்; 8 லட்சம் பேர் இளம் வாக்காளர்கள்

சென்னை

தமிழகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 26 லட்சத்து 74,446 ஆக உயர்ந்துள்ளது. ஆண்களைவிட 9 லட்சத்து 90 ஆயிரத்து 254 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இதற்காக தகுதியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்களர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, 3 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 172 ஆண்கள், 3 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 969 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 6 ஆயிரத்து 497 பேர் என மொத்தம் 6 கோடியே 13 லட்சத்து 6 ஆயிரத்து 638 வாக்காளர்கள் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து நவ. 16 முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், இறந்தவர்கள் பெயர்களை நீக்கல், திருத்தம் செய்தல், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நவ 21, 22, டிசம்பர் 12, 13 ஆகிய நான்கு நாட்கள் தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த ஒரு மாதத்தில் பெயர் சேர்த்தல், நீக்கல், இடமாற்றம், திருத்தம் போன்றவற்றுக்காக 30 லட்சத்துக்கும் அதிகமான மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹுவும், அந்தந்தமாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும் நேற்று வெளியிட்டனர். இதுதொடர்பாக சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி காலத்தின்போது, பெயர் சேர்க்க 21 லட்சத்து 82 ஆயிரத்து 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 21 லட்சத்து 39 ஆயிரத்து 307 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டன. பெயர் நீக்கத்துக்காக 5 லட்சத்து 9 ஆயிரத்து 307 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகியகாரணங்களுக்காக அவை நீக்கப்பட்டுள்ளன. பதிவுகளில் திருத்தம் செய்யக் கோரி 3 லட்சத்து 32 ஆயிரத்து 743 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 3 லட்சத்து 9 ஆயிரத்து 292 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஒரே சட்டப்பேரவை தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய 1 லட்சத்து 84 ஆயிரத்து 791 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 365 மனுக்கள் ஏற்கப்பட்டு உரிய மாற்றங்கள் செய்யப்பட்டன

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள்முடிவுற்ற நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல்படி தமிழகத்தில் 6 கோடியே 26 லட்சத்து 74 ஆயிரத்து 446 வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3 கோடியே 8 லட்சத்து 38 ஆயிரத்து 476 ஆண்கள், 3 கோடியே 18 லட்சத்து 28 ஆயிரத்து 727 பெண்கள் மற்றும் 7,246 மூன்றாம் பாலினத்தவரும் அடங்குவர். ஆண் வாக்காளர் களைவிட 9 லட்சத்து 90 ஆயிரத்து 251 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதி 6 லட்சத்து 94 ஆயிரத்து 845 வாக்காளர்களுடன் தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாகவும், துறைமுகம் தொகுதி 1 லட்சத்து 76 ஆயிரத்து 272 வாக்காளர்களுடன் குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாகவும் உள்ளன. வெளிநாடு வாழ் வாக்காளர்கள் 47 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை 4 லட்சத்து 82 ஆயிரத்து 597 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின்போது, 18 முதல் 19 வயதுடைய 4 லட்சத்து 80 ஆயிரத்து 953 ஆண்கள், 4 லட்சத்து 16 ஆயிரத்து 423 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 318 பேர் என 8 லட்சத்து 97 ஆயிரத்து 694 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலை, ‘http://elections.tn.gov.in’ என்றஇணையதளத்தில் காணலாம். வாக்காளர் பட்டியல் தொடர் திருத்த நடைமுறைதற்போது செயல்பாட்டில் உள்ளது. 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பதிவு அலுவலகத்தில் படிவம் 6-ஐ சமர்ப்பிக்கலாம். ‘www.nvsp.in’ என்ற இணையதளம் அல்லது கூகுள் பிளேஸ்டோரில் ‘voter helpline app’ செயலியை பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

இதுதவிர 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி, தலைமை தேர்தல் அதிகாரியின் 180042521950 என்ற எண்ணையும் தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் அதிகபட்சமாக சென்னையில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 169 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 20 ஆயிரத்து 185 பேரும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல அதிகபட்சமாக சென்னையில் 40,513, குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 1,048 பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. சேவை வாக்காளர்களில் 71,110 ஆண்கள், 1,743 பெண்கள் என 72,853 பேர் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x