Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

கூட்டத்தை கூட்டுவதால் போக்குவரத்து நெரிசல்; வேட்பாளர்கள் ஆன்லைனில் மனுதாக்கல் செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை

வேட்புமனு தாக்கலின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதிக்குள்ளாவதைத் தடுக்க வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் ஆன் லைனில் மனுதாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி என எந்தத்தேர்தல் வந்தாலும், உற்சாகமடைவது கட்சியினர் மட்டுமே. ஆனால் பொதுமக்கள் தேர்தலை இடையூறாகவே கருதுகின்றனர். ஒவ்வொரு தேர்தலின்போதும் பிரச்சாரம் செய்கிறோம், ஓட்டு கேட்க வருகிறோம் என்ற பெயரில் காலை 7 மணிக்கே வேட்பாளர்களும், கட்சியினரும் வீட்டுக் கதவை தட்டுகின்றனர். இரவு 9 மணிக்கு பேச வரும் தலைவருக்காக, காலையிலேயே தெருக்களை மறித்து மேடை அமைத்து ஒலிபெருக்கியை அலற விடுகின்றனர்.

பட்டாசு வெடிக்க தடையிருந் தும், ஒவ்வொரு தெருவிலும் தலைவர்களை வரவேற்க சரவெடி பட்டாசுகளை வெடித்து காற்று மாசுவை ஏற்படுத்துகின்றனர். இவ்வாறு தேர்தல் காலத்தில் மக்கள் படும் துயரங்கள் நீள்கின்றன.

குறிப்பாக வேட்புமனு தாக்கலை ஒவ்வொரு கட்சியும்திருவிழாவாகவே கொண்டாடு கின்றன. வேட்புமனு தாக்கலின்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக நுழைவு வாயிலில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு அப்பால் வாகனத்தை நிறுத்திவிட வேண்டும். வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வரக் கூடாது என தேர்தல் நடத்தை விதிகள் இருந்தும், அதை பிரதான கட்சிகள் கண்டுகொள்வதே இல்லை.

தேர்தல் விதிகளை மீறும் கட்சிகள் மீது இதுவரை தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுத்ததில்லை. இதனால் வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகம் உள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதைச் சமாளிக்க போக்குவரத்தை திருப்பி விடுவதால் மற்றசாலைகளிலும் நெரிசல் அதிகமாகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின் றனர்.

அரசியல் கட்சிகள் தங்கள் வலிமையை தங்களது எதிர்க்கட்சிகளுக்கு தெரிவிக்கும் களமாக வேட்புமனு தாக்கலைக் கருதுகின்றன. இப்படி கூட்டத்தைக் கூட்டுவதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உணர மறுக்கின்றனர்.

கரோனா பரவல்

மேலும், பாதுகாப்பு எனக் கூறி நூற்றுக்கணக்கான போலீஸாரும் குவிக்கப்படுகின்றனர். தற்போது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி உட்பட பெரும்பாலான சேவைகள் ஆன்லைனுக்கு மாறிவிட்டன. எனவேவேட்புமனு தாக்கலை ஆன்லைனில் செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேட்புமனுவில் குறை இருந்தால், மின்னஞ்சலில் தெரிவித்து, வேட்புமனு பரிசீலனை நாளன்று நேரில் தாக்கல் செய்ய அறிவுறுத்தலாம் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் கேட்டபோது, அதிகாரிகள் பதில் ஏதும் அளிக்கவில்லை.

தங்கள் வலிமையை காட்டும் களமாக வேட்புமனு தாக்கலைக் கருதுகின்றன. இப்படி கூட்டத்தைக் கூட்டுவதற்கும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உணர மறுக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x