

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் யாருக்கும் இதுவரை எந்தவிதமான பாதிப்பும் இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மதுரை விமானநிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் தொடர்ந்து கரோனா தடுப்பூசி போடும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்துக்கு ஏற்கெனவே 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் வந்துள்ளன. நேற்று சென்னைக்கு விமானம் மூலம் கூடுதலாக 5 லட்சத்து 8 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் வந்தடைந்திருக்கிறது.
தற்போது தமிழகத்தில் 166 இடங்களில் தடுப்பூசி மையங்கள் உள்ளன. இன்னும் மையங்களை அதிகப்படுத்தும் திட்டம் உள்ளது. தற்போது மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டோர் யாருக்கும் எந்தவிதமான பாதிப்பும் இல்லை. மற்றவர்கள் நம்பிக்கையோடு தொடர்ந்து போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், சிறு சிறு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அருகில் உள்ள அரசு கரோனா தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் அரசு மையங்களில் எந்தவிதக் கட்டணமும் இன்றி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.