Published : 21 Jan 2021 03:14 AM
Last Updated : 21 Jan 2021 03:14 AM

முதல்வரானது எப்படி என அனைவருக்கும் தெரியும் நேரடியாகவா மக்கள் தேர்ந்தெடுத்தனர்?- முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

தமிழக மக்கள் உங்களை நேரடியாகவா முதல்வராகத் தேர்ந்தெடுத்தார்கள்? நீங்கள் முதல்வரானது எப்படி என்பது மக்களுக்கு தெரியும் என முதல்வர் பழனிசாமி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டினார்.

மதுரை அருகே செக்கானூரணியில் திமுக சார்பில் நேற்று மாலை மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர்கள் பி.மூர்த்தி, எம்.மணிமாறன் தலைமை வகித்தனர்.

கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது: நேரடியாக வாக்களித்து யாரும் முதல்வராக முடியாது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழக மக்கள் யார் முதல்வர் என்பதை வாக்களிக்கும்போதே முடிவு செய்துவிடுவார்கள். இந்த அடிப்படையில்தான் கருணாநிதி, அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா முதல்வர் ஆனார்கள். ஆனால், பழனிசாமி எப்படி முதல்வரானார் என்பது அனைவருக்கும் தெரியும். பழனிசாமியின் ஆட்சியை திமுக நினைத்திருந்தால் ஒரு நொடியில் கவிழ்த்திருக்கலாம். நேரடியாக மக்களிடம் முறையிட்டு ஜனநாயக முறைப்படி இந்த ஆட்சியை அகற்றுவதே திமுகவின் நோக்கம்.

மதுரையில் எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்காவிட்டால் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவேன் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். 2019-ல் எய்ம்ஸ் கட்ட அடிக்கல் நாட்டியும் இதுவரை ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை. இதற்காக அமைச்சர் ராஜினாமா செய்தாரா?

முன்னாள் முதல்வர் கருணாநிதி ரூ.7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்தார். தற்போது விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டும் இதற்குத் தடை பெற்றுள்ளது தமிழக அரசு. திமுக ஆட்சிக்கு வந்தும் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளோம். ஆனால், இதே அறிவிப்பை அதிமுக வெளியிடத் தயாராகி வருவதாக தகவல் உள்ளது. 2 நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம்.

மக்களுக்கு தேவையான பணிகள் எதையும் அமைச்சர் உதயகுமார் தனது தொகுதியில் செய்யவில்லை. ஆனால், மக்களை ஏமாற்றவே ஜெயலலிதாவுக்கு கோயில் கட்டுகிறார். அதேநேரத்தில் ஜெயலலிதாவின் மரணத்தில் இதுவரை உண்மை வெளிவரவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் மர்ம மரணத்துக்கு யார் காரணம் என்பதைக் கண்டறிந்து மக்களுக்குத் தெரிவிப்போம்.

நல்லெண்ணெய், வெந்தயம், வத்தல், பாசிப்பருப்பு, மஞ்சள் என பல உணவுப்பொருட்களின் விலை திமுக ஆட்சியுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு வரை உயர்ந்துள்ளது. விலைவாசி உயரும்போது வரியைக் குறைத்து கருணாநிதி கட்டுக்குள் வைத்திருப்பார். அதிமுக அரசு எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x