இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸ், பாஜக அரசுகளிடையே வித்தியாசம் இல்லை: ராமதாஸ்

இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸ், பாஜக அரசுகளிடையே வித்தியாசம் இல்லை: ராமதாஸ்
Updated on
2 min read

இலங்கைப் பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், இப்போதைய பாஜக அரசுக்கும் வித்தியாசம் இல்லை என்பதையே அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருப்பது காட்டுவதாக ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்றுகள் குறித்து அந்நாட்டு நீதிமன்றத்தின் மூலமாகவே விசாரணை நடத்த வகை செய்யும் அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

போர்க்குற்றங்களையும், இனப் படுகொலையையும் நடத்திய கொடூரமானவர்கள் தண்டனையின்றி தப்பிக்கவும், சொந்தங்களை பறி கொடுத்தவர்கள் இறுதி வரை நீதி கிடைக்காமல் வாடவும் தான் இந்தத் தீர்மானம் வகை செய்யும்.

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அப்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் தான் காரணம் என்பது உலகம் அறிந்த உண்மையாகும். இதை ஆதாரங்களுடன் நிரூபித்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்பதே உலகத் தமிழர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் விருப்பமாக இருந்தது.

ஈழத்தமிழர்களின் நலன்களையும், மனித உரிமையை பாதுகாப்பதிலும் அக்கறை கொண்டவர்களாக காட்டிக்கொண்ட அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டுமென கடந்த ஆண்டு வரை வலியுறுத்தி வந்தன.

அதன்படி ஐ.நா. மனித உரிமை ஆணையர் அலுவலகம் சார்பில் விசாரணை நடத்தி, இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக போர்க்குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் நடத்தப்பட்டது உறுதி செய்யப் பட்டது. இவ்விசாரணையில் தெரியவந்த தகவல்களின் அடிப்படையில் பன்னாட்டு நீதிமன்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பது தான் இயற்கையான நீதியாக இருக்கும்.

ஆனால், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைக் காரணம் காட்டி, அங்குள்ள நிலைமை முற்றிலுமாக மாறி விட்டதைப் போன்ற ஒரு பொய்யான சித்திரத்தை உருவாக்கி, இலங்கை மீதான போர்க்குற்றத்தை அந்நாட்டு நீதிமன்றத்திலேயே விசாரிக்க அனுமதிப்பது ‘திருடன் கையில் சாவியை ஒப்படைப்பதற்கு’ ஒப்பாகும்.

ஈழத் தமிழர்களின் நலனில் அமெரிக்காவுக்கு அக்கறை இல்லை என்பதும், இலங்கையை தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவது மட்டும் தான் அதன் நோக்கம் என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.

இலங்கையை வழிக்கு கொண்டு வர இனப்படுகொலையை பகடைக்காயாக பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா, அதன் நோக்கம் நிறைவேறியதும் இலங்கையை காப்பாற்றத் துடிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இலங்கை மீதான தீர்மானத்தைக் கொண்டுவந்த இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, மாசிடோனியா, மாண்டிநெக்ரோ ஆகிய நாடுகளும், அதற்கு துணை நின்ற அல்பேனியா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கிரீஸ், லாத்வியா, போலந்து போன்ற நாடுகளும் அமெரிக்காவின் விரல் அசைவுக்கு கட்டுப்பட்டவை என்பதால் அவையும் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டதில் எந்த ஆச்சரியமுமில்லை.

ஆனால், ஈழத்தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட இந்தியா இந்த பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் தான் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சம அதிகாரம் கிடைப்பதற்கும், கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்போவதாக இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய இந்திய தூதர் அஜித்குமார் கூறியுள்ளார்.

உண்மையில் ஈழத் தமிழர்களுக்கு இவற்றைப் பெற்றுத்தர வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருந்தால், அதற்கு முன் போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி பெற்றுத் தர வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு அதிகாரமும், கண்ணியமான வாழ்க்கையும் கிடைக்க அது தான் அடிப்படையாக அமையும். போர்க்குற்ற விசாரணையை இலங்கை நீதிமன்றங்களே நடத்திக் கொள்ள அனுமதித்து விட்டு, தமிழர்களுக்கு உரிமை பெற்றுத் தருவதாகக் கூறுவது ஏமாற்று வேலை ஆகும்.

இலங்கை மீதான போர்க்குற்றச்சாற்று குறித்து பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு ஆணையிடக் கோரும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவே கொண்டு வர வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் கடந்த 16.09.2015 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்மீதான நிலைப்பாட்டை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு, கடைசி நேரத்தில் இலங்கைக்கு சாதகமான தீர்மானத்தை ஆதரித்திருப்பது பாதிக்கப் பட்ட தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த துரோகமும், அநீதியும் ஆகும்.

இலங்கைப் பிரச்சினையில் முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசுக்கும், இப்போதைய தேசிய ஜனநாயக் கூட்டணி அரசுக்கும் வித்தியாசம் இல்லை என்பதையே இப்பிரச்சினையில் இந்தியா மேற்கொண்ட நிலைப்பாடு காட்டுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in