Published : 08 Oct 2015 07:05 AM
Last Updated : 08 Oct 2015 07:05 AM

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இன்று வேலைநிறுத்தம்: அனைத்து பள்ளிகளுக்கும் பாதுகாப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதையொட்டி அனைத்துப் பள்ளிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது, தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக கருதி பணிவரன்முறை செய்வது, 6-வது ஊதியக் குழு முரண்பாடுகளை களைவது, மத்திய அரசு ஆசிரியர் களுக்கு இணையான ஊதியம் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 8-ம் தேதி (இன்று) ஒருநாள் அடையாள வேலைநிறுத் தப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் இயக் கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ) அறிவித்திருந்தது.

பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் ஆகியோர் சென்னை யில் நேற்று முன்தினம் ஜாக்டோ உயர்நிலைக்குழு உறுப்பினர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடக்கும் என்று ஜாக்டோ நிர்வாகிகள் அறிவித்தனர்.

இதற்கிடையே, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா, பள்ளிக்கல்வி இயக்கு நர் கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் இளங்கோவன் ஆகியோர் தலைமைச் செயலகத் தில் நேற்று ஆலோசனை நடத்தி னர். ஆசிரியர்கள் போராட்டம் குறித்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்ட அளவில் பள்ளிகளின் செயல்பாடு களைக் கண்காணிக்க 21 இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு மாவட்டங்கள் ஒதுக் கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அனைத்து பள்ளிகளுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து ஜாக்டோ மாநில உயர்நிலைக்குழு உறுப்பினரும், தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளருமான ஆர்.தாஸ் கூறும்போது, ‘‘தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தொடங்கி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் என சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். ஆசிரியர்கள் யாரும் பள்ளிகளுக்கு செல்ல மாட்டார்கள். அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்’’ என்றார்.

ஒருநாள் ஊதியம் இழப்பு

வேலைநிறுத்தப் போராட் டத்தில் பங்கேற்கும் ஆசிரியர்கள் விடுப்பு ஏதும் எடுக்காமல் ஆப்சென்ட் ஆவார்கள். இதனால், அவர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொள்வது குறித்து 2 மாதங்களுக்கு முன்பே அரசுக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டதால் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது என்று ஜாக்டோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

காலை 9 மணிக்குள் வருகை

அரசுப் பள்ளிகள் தினமும் காலை 9.30 மணிக்கு தொடங்கும். ஆசிரியர்கள் 9.15 மணி அளவில்தான் பள்ளிக்கு வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவர். இன்று ஜாக்டோ சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் நடப்பதால், அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் காலை 9 மணிக்கு முன்பாக வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x