

தூத்துக்குடியில் மழை ஓய்ந்து 5 நாட்களாகியும் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாததால் மக்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர்.
கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக, தூத்துக்குடி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதியடைந்தனர். மாநகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணி இரவு பகலாக நடைபெற்ற போதிலும், இன்னும் மழைநீர் வடியவில்லை.
மழை ஓய்ந்து 5 நாட்களாகியும் குறிஞ்சிநகர், முத்தம்மாள் காலனி,ராம் நகர், ரஹமத் நகர், லெவிஞ்சிபுரம், பிரையண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளைச் சுற்றி இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம் குளம் போல காட்சியளிக்கிறது.
தூத்துக்குடி நேதாஜி நகர் பகுதியில் மழைநீரை வெளியேற்றக் கோரி அப்பகுதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். ரஹ்மத் நகர், ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளை எம்எல்ஏ பெ.கீதாஜீவன் நேற்று ஆய்வு செய்தார்.
மாவட்டத்தில் பெரும்பாலான மானாவாரி குளங்கள் நிரம்பியுள்ளன. ஊராட்சி ஒன்றியங்கள் கட்டுப்பாட்டில் உள்ள 407 மானாவாரி குளங்களில் 227 குளங்கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. 111 குளங்கள் 75 சதவீதம், 55 குளங்கள் 50 சதவீதம், 14 குளங்கள் 25 சதவீதம் அளவுக்கு நிரம்பியுள்ளன.