

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொங்கல் தொகுப்பு முறையாக வழங்கப்படவில்லை என கட்டுமான தொழிலாளர்கள் மக்கள் குறை தீர்வுக்கூட்டத்தில் ஆட்சியரிடம் புகாரளித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளி மற்றும் ஆலங்காயம் ஆகிய 5 இடங்களில் மக்கள் குறை தீர்வுக்கூட்டம்நடைபெற்றது. திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர்வுக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார். இதில், நிலப்பட்டா, இலவச மின் இணைப்பு, கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை, காவல் துறை பாதுகாப்பு, வீட்டு மனை பட்டா உள்ளிட்ட 193 பொது நல மனுக்களை ஆட்சியர் சிவன் அருள் பெற்றுக்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுமான தொழிலாளர்கள் அளித்த மனுவில், ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் வசித்து வருகிறோம். இந்நிலையில், பொங்கல் பண்டிகையொட்டி, தமிழக அரசு கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்குவதாக அறிவித்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படவில்லை. அரசியல் தலையீடு காரணமாக தகுதியானவர்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளனர். எனவே, தகுதியான கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க வேண்டும்’’என தெரிவித்துள்ளனர்.
மனுவை பெற்ற ஆட்சியர் சிவன் அருள் பொங்கல் பரிசு தொகுப்பு இம்மாதம் இறுதி வரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அதேபோல, மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுவில், ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை சரிவர வழங்கப்படுவதில்லை, தகுதியானவர்களுக்கு உதவித்தொகை நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பலமுறை புகார் மனு அளித்தும் நடவடிக்கைஇல்லை. அரசு வழங்கும் உதவித்தொகையை நம்பியுள்ள எங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை முறையாக கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’’ என தெரிவித் துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வில்சன்ராஜசேகர், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி, திருப்பத்தூர் வட்டாட்சியர் மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.