விதிமுறை இருந்தும் சிவகங்கை மாவட்ட திருவேலங்குடிக்கு இந்தாண்டும் தொடக்கப் பள்ளி அறிவிப்பு இல்லை: 45 குழந்தைகளை கைவிடுகிறதா கல்வித்துறை?

விதிமுறை இருந்தும் சிவகங்கை மாவட்ட திருவேலங்குடிக்கு இந்தாண்டும் தொடக்கப் பள்ளி அறிவிப்பு இல்லை: 45 குழந்தைகளை கைவிடுகிறதா கல்வித்துறை?
Updated on
1 min read

சிவகங்கை அருகே திருவேலங்குடியில் 45 குழந்தைகள் இருந்தும், இந்தாண்டும் தொடக்கப் பள்ளி தொடங்குவதற்கான அறிவிப்பு இல்லாதததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் கவுரிப்பட்டி ஊராட்சியில் அருகருகேயுள்ள திருவேலங்குடி, காரம்பட்டி கிராமத்தில் 400 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை படிக்கும் 45 குழந்தைகள் இருந்தும் பள்ளிக்கூடம் இல்லை. இதனால் அவர்கள் காளையார்மங்கலம் (5 கி.மீ.), ஒக்கூர் (8 கி.மீ.,), நாட்டரசன்கோட்டை (4 கி.மீ.) ஆகிய கிராமங்களில் படித்து வருகின்றனர்.

கரோனா ஊரடங்கிற்கு முன்பாக அவர்கள் தினமும் நடந்தும், சரக்கு வாகனங்களிலும் பள்ளிக்கு சென்று வந்தனர். மேலும் நடந்து செல்லும் மாணவர்கள் ரயில்வே கிராசிங்கை ஆபத்தான முறையில் கடந்து வந்தனர். அரசு விதிமுறைப்படி 25 மாணவர்கள் இருந்தாலே தொடக்கப் பள்ளி தொடங்கலாம்.

விதிமுறை இருந்தும் எம்எல்ஏ சிபாரிசு இல்லை எனக்கூறி பள்ளி திறப்பதில் அதிகாரிகள் மெத்தனம் காட்டினர்.

ஓராண்டுக்கு முன்பு புதிதாக பள்ளி தொடங்க வலியுறுத்தி கிராமமக்கள் ஊரை விட்டு வெளியேறி கோயிலில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து அப்போதைய ஆட்சியர் ஜெயகாந்தன் பள்ளி தொடங்க நடவடிக்கை எடுத்தார். ஆனால் அக்கிராமத்தில் அரசு நிலம் இல்லாததால், பள்ளி தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து தனியார் சார்பில் கல்வித்துறைக்கு 60 சென்ட் நிலம் தானமாக கொடுக்கப்பட்டது. இதனால் எப்படியும் இந்தாண்டு தொடக்கப் பள்ளி கிடைத்துவிடும் என்ற எதிர்பார்ப்பில் கிராமமக்கள் இருந்தனர். ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட புதிய தொடக்கப் பள்ளி பட்டியலில் திருவேலங்குடி கிராமம் இடம் பெறவில்லை. இதனால் கிராமமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து முதன்மைக் கல்வி அலுவலர் பாலுமுத்து கூறுகையில், ‘‘சிவகங்கை மாவட்டத்திற்கு இந்தாண்டு 2 புதிய தொடக்கப் பள்ளிகள் கிடைத்துள்ளன. திருவேலங்குடிக்கு பள்ளி கேட்டு அறிக்கை அனுப்பிவிட்டோம். அடுத்தாண்டு உறுதியாக கிடைக்கும்,’’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in