அரசியல் கட்சிகள் உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு 

அரசியல் கட்சிகள் உட்கட்சித் தேர்தலை நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் மனு 
Updated on
1 min read

தமிழகத்தில் உட்கட்சித் தேர்தலை ஏப்ரலுக்குள் நடத்த வேண்டும். அதுவரை சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அதிமுக, பாஜக, சிபிஎம் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களின் உட்கட்சித் தேர்தல்களை நடத்தி, அதற்குரிய சான்றிதழ்களைச் சமர்ப்பிக்கும் வரை சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடத்துவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பாகக் கருதப்படுவதைப் போல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களின் உட்கட்சித் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பதும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பாகக் கருதப்பட வேண்டும்.

குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக அதிமுகவில் உட்கட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. உட்கட்சித் தேர்தலை நடத்தாததால் பல அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளில் பொறுப்புகள் பெற முடியாமல் நிர்வாகிகள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே, நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் உட்கட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று சூரியமூர்த்தி கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in