

சிவகங்கை மாவட்டம் சூராணம் அருகே வெள்ளத்தில் இருந்து 3 கிராமங்களை காப்பாற்ற தேவகோட்டை-பரமக்குடி நெடுஞ்சாலையை மக்களே உடைத்துவிட்டனர். இதனால் பேருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சூராணம் அருகே வலனை கிராமம் அருகே குருந்தங்குடி கண்மாய் உள்ளது. இப்பகுதியில் பெய்த தொடர் மழையால் கண்மாய் நிரம்பி கழுங்கில் இருந்து தண்ணீர் வெளியேறியது.
ஆனால் அதனருகே குறுக்கே செல்லும் தேவகோட்டை - பரமக்குடி நெடுஞ்சலையால் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதன்காரணமாக கண்மாய் உடையும் நிலை ஏற்பட்டது. கண்மாய் உடைந்தால் வலனை, நேமம், முத்துப்பட்டணம் ஆகிய 3 கிராமங்கள் பாதிக்கும்நிலை ஏற்பட்டது.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதநிலையில் கிராமமக்களே சாலையை உடைத்துவிட்டனர். இதையடுத்து அவ்வழியாக வெள்ளநீர் வெளியேறி வருகிறது. மேலும் சாலையில் உடைக்கப்பட்டதால் தேவகோட்டை, பரமக்குடி, சூராணம், சருகணி பேருந்துகள் நிறுத்தப்பட்டன.
இதனால் தேவகோட்டையில் இருந்து பரமக்குடிக்கு காளையார்கோவில் வழியாக செல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வலனை கிராமமக்கள் கூறியதாவது: கண்மாய் உடைந்தால் 3 கிராமங்களைச் சேர்ந்த 300 குடும்பங்கள் பாதிக்கப்படும். பல இடங்களில் கிராம சாலைகளில் கூட மேம்பாலம் கட்டியுள்ளனர்.
ஆனால் முக்கிய சாலையான தேவகோட்டை - பரமக்குடி சாலையில் பாலம் கட்டவில்லை. இதனால் தான் தண்ணீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. விரைவில் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினர்.