Published : 20 Jan 2021 06:40 PM
Last Updated : 20 Jan 2021 06:40 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில் 20.69 லட்சம் வாக்காளர்கள்: முதல் முறையாக வாக்களிக்க உள்ள 49,879 இளைஞர்கள்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார். பட்டியலில் 20.69 லட்சம் பேர் இடம் பெற்றுள்ள நிலையில், 49,879 இளம் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (ஜன.20) வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி பெற்றுக் கொண்டார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கிருஷ்ணமூர்த்தி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

20.69 லட்சம் வாக்காளர்கள்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், புதிய வாக்காளர் சேர்க்கை, பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அதன்படி, 25 ஆயிரத்து 289 ஆண்கள், 30 ஆயிரத்து 426 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 22 பேர் என மொத்தம் 55 ஆயிரத்து 737 பேர் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்ந்துள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 10 லட்சத்து 13 ஆயிரத்து 774 ஆண்கள், 10 லட்சத்து 55 ஆயிரத்து 220 பெண்கள், 97 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 20 லட்சத்து 69 ஆயிரத்து 91 வாக்காளர்கள் உள்ளனர்.

தொகுதிகளில் வாக்காளர்கள்:

வ.எண் - தொகுதி - ஆண்கள் - பெண்கள் - மூன்றாம் பாலினம் - மொத்தம்

1. செங்கம் (தனி) - 1,35,563 – 1,37,760 – 10 - 2,73,333

2. திருவண்ணாமலை - 1,37,856 – 1,46,956 - 39 – 2,84,851

3. கீழ்பென்னாத்தூர் - 1,23,722 – 1,28,317 - 8 – 2,52,047

4. கலசப்பாக்கம் - 1,19,195 – 1,22,774 - 12 – 2,41,981

5. போளூர் - 1,19,269 – 1,23,642 – 4 – 2,42,915

6. ஆரணி - 1,32,253 – 1,41,788 – 22 – 2,75,063

7. செய்யாறு - 1,26,686 – 1,32,544 – 1 – 2,59,231

8. வந்தவாசி (தனி) - 1,18,230 – 1,21,439 – 1 – 2,39,670

அதிக வாக்காளர்களையும், ஆண்கள் மற்றும் பெண்கள் வாக்காளர்கள் உள்ள தொகுதியாகவும் திருவண்ணாமலை இருக்கிறது. குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக வந்தவாசி தனித் தொகுதி உள்ளது.

16,696 பேர் நீக்கம்:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இறந்த வாக்காளர்கள், இடம் பெயர்ந்தோர், இருமுறை பதிவு கொண்டவர்கள் என மொத்தம் 16 ஆயிரத்து 696 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயதுள்ள இளம் வாக்காளர்கள் 49 ஆயிரத்து 879 பேர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.

திருவண்ணாலை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து வருவாய்க் கோட்டாட்சியர், வட்டாட்சியர், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x