Published : 20 Jan 2021 05:32 PM
Last Updated : 20 Jan 2021 05:32 PM

சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வர முடியாது: அமைச்சர் உதயகுமார்

மதுரை

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வர முடியாது என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு தலா 7 அடிக்கு மேல் உயரமுள்ள 400 கிலோ எடையுள்ள முழு நீல வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இதனை முதல்வரும், துணை முதல்வரும் வரும் 30-ம் தேதி திறந்து வைக்க வருகின்றனர். இந்த விழாவில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

முதல்வர் கரோனா தொற்று பரவலையும் பொருட்படுத்தாமல் கடந்த 8 மாதமாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்து வருகிறார்.

ஆனால், அறைக்குள் முடங்கிக் கிடந்த ஸ்டாலின், இன்றைக்கு கிராமசபை கூட்டம் என்ற பெயரில் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்பதை நாட்டு மக்கள் இன்னும் மறக்கவில்லை. கடந்த திமுக ஆட்சியின்போது நடந்த சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கடும் மின்வெட்டு, விலைவாசி உயர்வு, நில அபகரிப்பு இப்படிப்பட்ட சம்பவங்களை இன்னும் மக்கள் மறக்கவில்லை.

அதுமட்டுமல்லாது இரண்டு ஏக்கர் நிலம் தருவோம் என்று கூறி அப்பாவி மக்களின் நிலத்தை அபகரித்ததையும் யாரும் இன்னும் மறக்கவில்லை. மன்னிக்கவும் இல்லை.

ஆகவே ஸ்டாலின் எத்தனை முறை பொய்ப் பிரச்சாரம் செய்தாலும் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட வரமுடியாது. அதிமுக நிச்சயம் ஹாட்ரிக் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x