

கேரள நகைக்கடைக்கு கொண்டு சென்ற ரூ.76 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை போலீஸார் போல் உடையணிந்து வந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. இ்ச்சம்பவம் தொடர்பாக 5 பேர் கொண்ட கும்பலை குமரி போலீஸார் கைது செய்தனர்.
கேரள மாநிலயம் நெய்யாற்றின் கரையில் உள்ள கேரளா பேஷன் ஜீவல்லரி உரிமையாளர் சம்பத். இவர் நகைக் கடைகளுக்கு தங்கக் கட்டிகளை விற்பனை செய்து பணம் பெற்று வந்தார்.
திருநெல்வேலியில் நகைக்கடை நடத்தி வரும் சம்பத்தின் உறவினர் ஒருவர் தங்கக் கட்டிகள் வாங்குவதற்காக கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை வந்துள்ளார்.
அவரிடம் தங்கக் கட்டிகளை கொடுத்துவிட்டு அதற்கான பணத்தை வாங்கி வருமாறு சம்பந்தின் கார் ஓட்டுனரான நெய்யாற்றின் கரையை அடுத்துள்ள மாவர்த்தலவீட்டைச் சேர்ந்த கோபகுமார்(37) என்பவரிடம் தங்கக் கட்டிகளை கொடுத்து அனுப்பியுள்ளார்.
தங்கக் கட்டிகளுடன் சென்ற கோபகுமார், வெகுநேரம் கழித்து தங்க கட்டிகளைக் கொடுத்துவிட்டு அதற்காான பணம் ரூ.76 லட்சத்து 40 ஆயிரத்துடன் காரில் திரும்பியபோது தக்கலை அருகே வைத்து போலீஸ் உடையணிந்த இருவர் உட்பட 4 பேர் கொண்ட கும்பல் தன்னைத் தாக்கி பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக நகைக்கடை உரிமையாளர் சம்பத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சம்பத் தக்கலை காவல் நிலையத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் குற்றவாளிகளை கைது செய்ய தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன், பயிற்சி ஏ.எஸ்.பி. சாய் பிரணித், தக்கலை காவல் ஆய்வாளர் அருள்பிரகாஷ் ஆகியோர் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வழித்தடத்தில் உள்ள வில்லுக்குறியில் இருந்து நெய்யாற்றின்கரை வரையுள்ள கண்காணிப்பு காமிரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது போலியான கேரள பதிவெண் ஒட்டப்பட்ட இன்னோவா காரை கண்டுபிடித்து கேரள மாநிலம் குற்றியாணிகாட்டை சேர்ந்த சஜின்குமார்(37), பெருங்கடவிழாவை சேர்ந்த ராஜேஷ்குமார், பரியோட்டை சேர்ந்த சுரேஷ்குமார், மவர்த்தலவீட்டை சேர்ந்த கண்ணன், அதே பகுதியை சேர்ந்த கோபகுமார் ஆகியோரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
விசாரணையில் நகைகடையில் வேலை செய்த கோபகுமார் கொடுத்த தகவலின்பேரில் அவரது நண்பர்களான மற்ற 4 பேரும் அவரது காரை பின்தொடர்ந்து, மற்றொரு காதரில் சென்று பணத்தைக் கொள்ளையடித்திருப்பதும், தங்க பிஸ்கெட்டை விற்று பணத்துடன் திரம்பியபோது கொள்ளையடிப்பதற்கு கோபகுமார் சதித்திட்டம் வகுத்து கொடுத்ததும் தெரியவந்தது.
மேலும் கொள்ளையடிக்க பயன்படுத்திய இன்னோவா கார், மற்றும் கொள்ளையர்கள் பயன்படுத்திய கேரள காவல்துறையின் இரு சீருடைகளையும் போலீஸார் கைப்பற்றினர்.
நூதனமுறையில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தில், 15 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.76 லட்சத்து 40 ஆயிரம் பணத்தை மீட்ட குமரி போலீஸாரை எஸ்.பி. பத்ரிநாராயணன் வெகுவாக பாராட்டினார்.