

இறுதி வாக்காளர் பட்டியலின்படி ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளில் 11,57,540 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 1.1.2021 தகுதி நாளாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு நேற்று வெளியிட்டார்.
பின்னர் ஆட்சியர் கூறியதாவது, 16.11.2020 வரைவு வாக்காளர் பட்டியலின்படி மாவட்டத்தில் உள்ள பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 5,68,014 ஆண் வாக்காளர்கள், 5,70,306 பெண் வாக்காளர்கள், 63 மூன்றாம் பாலின வாக்காளர் என மொத்தம் 11,38,383 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.
வாக்காள பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் மேற்கொள்வதற்காக கடந்த நவ.16 முதல் டிச.15 வரை பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 14,049 ஆண் வாக்காளர்கள், 15,716 பெண் வாக்காளர்கள், 6 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 29,771 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல 5,720 ஆண் வாக்காளர்கள், 4,890 பெண் வாக்காளர்கள், 4 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 10,614 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இறுதி வாக்காளர் பட்டியல்படி 4 தொகுதிகளிலும் 5,76,343 ஆண் வாக்காளர்கள், 5,81,132 பெண் வாக்காளர்கள், 65 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 11,57,540 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியல்களை
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் மற்றும் நகராட்சி ஆணையர் அலுவலகங்களிலும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும். மேலும் இந்தியத் தேர்தல் ஆணைய இணையதளங்களிலும் பொதுமக்கள் இறுதி வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஏ.சிவகாமில, ராமநாதபுரம் சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் து.தங்கவேல் உள்ளிட்ட தேர்தல் அலுவலர்கள், உதவித் தேர்தல் அலுவலர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இறுதி வாக்காளர் பட்டியல்படி 4 தொகுதிகளின் வாக்காளர்கள்:
பரமக்குடி(தனி) தொகுதியில் 1,26,068 ஆண் வாக்காளர்கள், 1,28,298 பெண் வாக்காளர்கள், 15 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 2,54,381 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
திருவாடானை தொகுதியில் 1,43,967 ஆண் வாக்காளர்கள், 1,43,888 பெண் வாக்காளர்கள், 20 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 2,87,875 வாக்காளர்கள் உள்ளனர்.,
ராமநாதபுரம் தொகுதியில் 1,51,772 ஆண் வாக்காளர்கள், 1,54,579 பெண் வாக்காளர்கள், 21 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 3,06,372 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
முதுகுளத்தூர் தொகுதியில் 1,54,536 ஆண் வாக்காளர்கள், 1,54,367 பெண் வாக்காளர்கள், 9 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என 3,08,912 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.